இசையமைப்பாளர் ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத்தின் “ஓ பெண்ணே” என்ற வீடியோ ஆல்பப் பாடலை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டார். “ஓ பெண்ணே” பாடல் பான்-இந்தியன் பாப் என்ற சிறப்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரே நேரத்தில் 10 மொழிகளில் ஏராளமான படங்களில் பணியாற்றிய போதிலும் இசையமைப்பாளர் டிஎஸ்பி இதற்காக தனது நேரத்தை ஒதுக்கி இந்த அழகான பாடலை வெளியிட்டுள்ளார்.
இதுபற்றி இவ்விழாவில் டிஎஸ்பி பேசுகையில், “சுதந்திரமான இசைக் கலைஞர்களை ஸ்பாட்லைட்களின் கீழ் வரவழைக்க வேண்டும் என்ற லட்சிய முனைப்புடன் ராக்ஸ்டார் நிகழ்வை தொகுத்து வழங்கினேன். இந்தப் பாடலின் முக்கிய நோக்கம் அனைத்து மொழிகளிலும் உள்ள சுதந்திரமான இசைக் கலைஞர்களின் திறமைகளையும் ஆற்றலையும் வெளிப்படுத்துவதாகும். எதிர்காலத்தில், அவர்கள் பல மொழிகளில் இசையை உருவாக்க முடியும். சமீபத்தில் ஹிந்தியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது” என்றார்.
மேலும், கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்துள்ள அவர், “கமல் சார் ஒரு இசை மேதை. எனது அனைத்து முயற்சிகளிலும் அவர் ஒரு சிறந்த தூணாகவும் ஆதரவாகவும் இருந்துள்ளார். ஆரம்பத்தில் கமல் சாரிடம் ஒரு சர்வதேசப் பாடல் யோசனையை தனிப்பட்ட உரையாடலில் தெரிவித்தேன். எங்கள் இருவரையும் இணைக்கும் முக்கியக் காரணியாக இருந்தது அவரது இசை ஆர்வம்தான். அதனால்தான் இந்தப் பாடலை கமல் சார் வெளியிட வேண்டும் என்று நான் விரும்பினேன்” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
இசையமைப்பாளர் டிஎஸ்பியின் முயற்சிக்கு பாராட்டு தெரிவித்த கமல்ஹாசன், இதுபோன்ற பாடல்கள் பலருக்கும் ஊக்கமளிப்பதாக இருக்கும் என குறிப்பிட்டார்.