ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் தயாரிப்பில் பொன்ராம் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் டிஎஸ்பி.
ஊரில் நண்பர்கள் வட்டத்துடன் ஜாலியாக உலா வரும் விஜய் சேதுபதிக்கும் தாதா பாஸ்கருக்கும் மோதல் ஏற்பட, நம்ம நாயகன் டிஎஸ்பி ஆகி வில்லனை எப்படி பழிவாங்குகிறார் என்பதே ஒருவரிக் கதை.
திண்டுக்கல் வியாபாரிகள் சங்கத் தலைவர் இளவரசு மகனாக விஜய் சேதுபதி. நம்ம ஹீரோ பூக்கடை வியாபாரம், ஹீரோயின் குடும்பம் மிக்சர் கடை. அடடா… அருமையான பொருத்தம் போங்க…
விஜய் சேதுபதி அறிமுகமாகும் ஆரம்பக் காட்சியில் செம விறுவிறுப்பு. போலீஸ் உடையும் வேடமும் கச்சிதம்.
ஜாலியாக ஊர் சுற்றிக் கொண்டிருந்த விஜய் சேதுபதி டிஎஸ்பியாக வாழ்க்கையில் உயர, அதே நேரத்தில் வில்லனும் எம்எல்ஏவாக முன்னேறுகிறார். காக்கிச்சட்டையும் வெள்ளைச்சட்டையும் மோதுவதே படத்தின் பிற்பாதிக் கதை.
கதாநாயகி அனு கீர்த்தி வாஸ் அழகுப்பதுமையாக உலா வருகிறார். கோலிவுட்டில் இவர் ஒரு ரவுண்ட் வர வாய்ப்பிருக்கிறது.
பிக்பாஸ் புகழ் சின்னத்திரை நடிகை ஷிவானி நாராயணன், நடிகர்கள் புகழ், சிங்கம்புலி, தீபா சங்கர் என காமெடிக்கு பலரும் அணி சேர்ந்திருக்கிறார்கள்.
“வருத்தப்படாத வாலிபர் சங்கம்”, “ரஜினி முருகன்”, “சீமராஜா” ஆகிய வெற்றிப்படங்களை தந்த இயக்குநர் பொன்ராமிடம் ரசிகர்கள் இந்த படத்தில் அதிகம் எதிர்பார்த்தார்கள். ஆனால், ஏமாற்றிவிட்டார் என்றே கூறலாம்.
பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார் இமான். அதேநேரத்தில் பாடல்களில் இன்னும் சற்று கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.
மொத்தத்தில் மக்கள் நாயகன் விஜய் சேதுபதிக்காக டிஎஸ்பி-க்கு சல்யூட் அடிக்கலாம்.
– நிருபர் நாராயணன்