பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம், கஸ்தூரி, யாஷிகா, கெளதம் மேனன், செல்வராகவன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் டிடி நெக்ஸ்ட் லெவல்.
டிடி ரிட்டர்ன்ஸ் படத்தின் 2-ம் பாகமான இப்படத்தை நடிகர் ஆர்யா தயாரித்துள்ளார்.
கிருஷ்ணா என்னும் கிஸ்ஸா என்கிற கேரக்டரில் திரைப்பட விமர்சகராக நடித்துள்ளார் சந்தானம். அவரது விமர்சனத்தால் பல படங்களுக்கு பாதிப்பு ஏற்பட, இயக்குனர் செல்வராகவன் ஹிட்ச்காக் இருதயராஜ் என்ற பேயாக வந்து சந்தானத்தை திகில் தியேட்டரில் சிக்க வைக்கிறார்.
ஹிட்ச்காக் இருதயராஜின் படத்தை பார்க்க தியேட்டருக்கு வருமாறு அழைப்பு வருகிறது. அங்கு சென்ற பின்பு அது பேய்கள் கட்டுப்பாட்டில் உள்ள சினிமா தியேட்டர் என்பது கிஸ்ஸாவுக்கு புரிகிறது. தியேட்டரில் ஓடும் பேய் படத்தில் அவரும் குடும்பத்தினரும் சிக்கிக் கொள்ள, அவர்கள் மீண்டு வந்தனரா என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
கிஸ்ஸா கதாபாத்திரத்தில் ஹேர் ஸ்டைல், உடல்மொழி என அனைத்திலும் வித்தியாசம் காட்டியிருக்கிறார் சந்தானம். யாஷிகாவை கெளதம் வாசுதேவன் காதலிப்பது ஹைலைட் காமெடி. போதாக்குறைக்கு சந்தானமும் அமர்க்களப்படுத்தி இருக்கிறார்.
கிளாமர் ரோலுக்கு வேறு யாரும் தேவையில்லை என்று கூறும் வகையில் யாஷிகாவும், கஸ்தூரியும் நடித்துள்ளனர்.
ஆப்ரோ இசையும் தீபக்குமாரின் ஒளிப்பதிவும் ரசிகர்களை மிரட்டியிருக்கின்றன. படத்தின் செட் பிரம்மாண்டம்.
சினிமாவுக்குள் ஒரு சினிமாவை வைத்து வித்தியாசமாக திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குனர் பிரேம் ஆனந்த். இடியாப்பச் சிக்கல் போன்ற ஒரு புதுமையான கதையை நகைச்சுவையை கலந்து கலகலப்பாகவும் நகர்த்திச் சென்றுள்ளார்.
“டிடி நெக்ஸ்ட் லெவல்” படம் சந்தானத்திற்கு ஒரு மாஸ் லெவல் படம்.
– நிருபர் நாராயணன்