திருமண நிகழ்ச்சி ஏற்பாட்டாளராக கலகலப்பான கேரக்டரில் அசத்தியுள்ளார் சந்தானம். அவரது காதலியின் சகோதரி, திருமண நாளில் ஓடிப்போவதால் செலவு செய்த பணத்தை மணமகன் குடும்பத்தினர் திருப்பி கேட்கிறார்கள். இந்த நேரத்தில் தனது காரில் யாரோ கொள்ளையர்கள் வைத்த பணத்தை கொடுத்து பிரச்சனையை அப்போதைக்கு சமாளிக்கிறார் சந்தானம்.
ஆனால், அதன் பிறகு அதுவே பூதாகரமாக உருவெடுக்க, ஒருகட்டத்தில் பணத்தை மீட்க பேய் பங்களாவுக்குள் செல்கிறார் சந்தானம். பணத்தை மீட்டாரா, காதலியுடன் கை கோர்த்தாரா? என்பது தான் படத்தின் மீதிக்கதை.
இந்த படத்தில் கதாநாயகனுக்குரிய அத்தனை அம்சங்களும் சந்தானத்திடம் தென்படுகிறது. இனி அவர் ஹீரோவாக மட்டுமே நடிக்கலாமே என எண்ணத் தோன்றுகிறது. தனது கேரக்டரை உணர்ந்து முழுமையான நடிப்பை தந்திருக்கிறார் சந்தானம்.
காதலியாக வரும் அழகுப் பதுமை சுரபிக்கு படத்தில் கொஞ்சம் தான் வேலை என்றாலும் குறை சொல்ல முடியாத நடிப்பை தந்திருக்கிறார். பாலிவுட் கதாநாயகி போல் இருக்கும் இவருக்கு கோலிவுட்டில் நிச்சயம் தனியிடம் உண்டு.
நகைச்சுவை காட்சிகளில் ரெடின் கிங்ஸ்லி, பெப்சி விஜயன், தீனா, தங்கராஜ், மூனிஸ்காந்த் என அனைவரும் தங்கள் வேடத்திற்கு சிறப்பு சேர்த்துள்ளனர். பேய் வீட்டை சுற்றி வரும் காட்சியில் அனைவரது ரகளையில் வயிறு வலிக்க சிரிக்கலாம். இது ஒரு காட்சிக்காக கூட தியேட்டரில் டிக்கெட் வாங்கி படத்தை பார்க்கலாம்.
மயங்க வைக்கும் பாண்டிச்சேரியின் மொத்த அழகையும், பாழடைந்த பங்களாவையும் அற்புதமாக கேமராவுக்குள் கொண்டு வந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் தீபக்குமார்.
பின்னணி இசையில் ஆப்ரோ பின்னியெடுத்திருக்கிறார். சூப்பர்…!
யூ டியூப் பிரபலம் ஜி.பி.முத்து குரல், யூ டியூப் விளம்பரம் என படம் முழுவதும் புதுமை காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
அனைவரும் சிரித்து மகிழும்படி படத்தை பிரமாதமாக நகர்த்தியிருக்கிறார் டைரக்டர் பிரேம் ஆனந்த். டிடி ரிடர்ன்ஸ் நமக்கு நிச்சயம் ஹேப்பி ரிடர்ன்ஸ் தான்.
– நிருபர் நாராயணன்