பள்ளி மாணவர்கள் 12 பேர் ஒன்றுசேர்ந்து பேய் இருப்பதாக கூறப்படும் ஒரு ஊருக்கு, ஆர்வம் மேலிட கும்பலாக புறப்பட்டுச் செல்கின்றனர். அங்கு செல்லும் வழியில் மேலும் ஒரு சிறுவனையும் அழைத்துக் கொண்டு 13 பேராக செல்கின்றனர். ஒரு போராட்டத்தால் போக்குவரத்து முடங்கிவிட, காட்டு வழியே பயணத்தை தொடர்கின்றனர். அப்போது ஒவ்வொருவராக காணாமல் போக, திகிலுடன் மற்ற சிறுவர்கள் அவர்களை தேடுகின்றனர்.
காணாமல் போனவர்களுக்கு என்ன ஆனது, மாணவர்கள் ஊர் திரும்பினார்களா என்பது தான் படத்தின் மீதிக்கதை.
படத்தின் டைட்டில் கார்டு தொடங்கும் இடத்திலேயே அப்படியே நாமும் படத்திற்குள் பயணமாகிறோம். கிளைமாக்ஸ் வரை விறுவிறுப்பு குறையவில்லை.
படத்தில் நடித்துள்ள டீன்ஸ் அனைவருமே யதார்த்தமான நடிப்பில் அசத்தியிருக்கிறார்கள். யோகிபாபும் கொடுத்த வேலையை செய்துவிட்டு சில சீன்களுடன் விடைபெற்றுக் கொள்கிறார்.
மஞ்சுமல் பாய்ஸ் படத்தை சற்றே ஞாபகப்படுத்தினாலும், இங்கே புதுமைப்பித்தன் பார்த்திபனின் இயக்கத்தில் சுவாரஸ்யம் அதிகம். படத்திலும் சில காட்சிகளில் வருகிறார்.
இமான் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு கூடுதல் சிறப்பு.
இதுபோன்ற சிறிய பட்ஜெட் படங்களையும் மக்கள் ஆதரித்தால் தான், சினிமா என்னும் மாபெரும் கலை அவ்வப்போது தன்னைத்தானே உயிர்ப்பித்துக் கொள்ளும்.
அரைத்த மாவை அரைக்கும் திரைப்படங்களுக்கு மத்தியில், புதிய பாதையில் பயணித்திருக்கிறார் பார்த்திபன். ஸ்பெஷல் கிளாப்ஸ்.
– நிருபர் நாராயணன்