சோசியல் மீடியாவில் தேர்வர்கள் போட்டுத் தாக்கியதில், மிரண்டுபோன TNPSC குரூப் 4 தேர்வு முடிவுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என ஒருவழியாக அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் 397 கிராம நிர்வாக அலுவலர், 2,792 இளநிலை உதவியாளர், 34 வரித்தண்டலர், 509 நில அளவையர், 74 வரைவாளர், 1,901 தட்டச்சர், 784 சுருக்கெழுத்து தட்டச்சர் உள்பட குரூப்-4 பதவிகளில் 7,301 பணியிடங்கள் காலியாக உள்ளன.
இப்பதவிகளை நிரப்புவதற்காக கடந்த 2022 ஜூலை 24-ம் தேதி தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை தமிழ்நாடு முழுவதும் 18 லட்சத்து 50 ஆயிரத்து 471 பேர் எழுதினர். அதாவது சராசரியாக ஒரு பணியிடத்திற்கு 253 பேர் போட்டி போடும் நிலை உள்ளது.
தேர்வுக்கான அறிவிப்பு வெளியியான போதே, தேர்வு முடிவு 2022 அக்டோபரில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவ்வாறு வெளியாகவில்லை.
பெண்களுக்கான இடஒதுக்கீடு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை பின்பற்றி தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் காலதாமதம் ஏற்படும் என பின்பு தெரிவிக்கப்பட்டது. அதன்படி, கடந்த டிசம்பரில் தேர்வு முடிவு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், அப்போதும் முடிவு வெளியிடப்படவில்லை.
பின்னர், 2023 பிப்ரவரி மாதம் முடிவுகள் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆனாலும் அப்படியும் தேர்வு முடிவு வெளியாகவில்லை. இதனால், அரசு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் தேர்வு எழுதிய 18 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பெரும் ஏமாற்றமும் அதிருப்தியும் அடைந்தனர்.
இந்நிலையில், கடந்த மாதம் 14-ந் தேதி இதுதொடர்பாக TNPSC வெளியிட்ட அறிக்கையில், மார்ச் மாதத்தில் முடிவு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. எனினும் இதுதொர்பாக வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை.
இந்நிலையில், குரூப்-4 தேர்வு முடிவை உடனடியாக வெளியிடக்கோரி சோசியல் மீடியாவில் தங்கள் கருத்துக்களை தேர்வர்கள் பதிவிடத் தொடங்கினர்.
டுவிட்டரில் We want Group-4 Result என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங் ஆனது. மேலும் மீம்ஸ் போட்டும் கலாய்த்து தள்ளினர்.
இவை லட்சக்கணக்கான பார்வைகளை பெற்றதால், அரண்டுபோன TNPSC அவசர அவசரமாக புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், 2022 ஜூலை 24-ம் தேதி நடைபெற்ற குரூப் -4 தேர்வுக்கான முடிவுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்றும், அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்பு ராமேஸ்வரம், கீழக்கரை தேர்வு மையங்களில் குரூப்-4 தேர்வு எழுதியவர்களில், 39 பேர் மோசடி செய்து மாநில அளவில் டாப் 100-ல் வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமா குரூப்-2 ஏ தேர்விலும் இத்தகைய முறைகேடுகள் அரங்கேறின. பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்விலும் மோசடிகள் நடைபெற்றன.
அந்தவகையில் முறைகேடுகளை செய்யவே, இப்படி 8 மாதங்களாக குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியாகாமல் இருக்கிறதா…? ஆண்டவனுக்கே வெளிச்சம்…!
தகவலை நமது தலைமை நிருபரிடம் கூறிவிட்டு, தன் கூடு நோக்கி பறந்தது ஊர்குருவி…