இரவு நேர ஆம்னி பேருந்தில் ஒரு பெண்ணுக்கு ஆபத்து என்ற தொலைபேசியும், மகளை காணவில்லை என்ற புகாரும் குறித்து விசாரிக்க களமிறங்குகிறார் கட்டுமஸ்தான கதாநாயகன் சிபிராஜ். சேலம் மாவட்டம் ஆத்தூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக வரும் அவர், துப்பு துலக்க நடத்தும் 10 மணி நேர விசாரணையே டென் ஹவர்ஸ் படத்தின் ஒன்லைன் ஸ்டோரி.
சபரிமலைக்கு மாலை போட்டிருக்கும் சிபி, விடிந்தால் கோயிலுக்கு புறப்பட வேண்டும் என்ற சூழலில் ஜெட் வேகத்தில் கதையை நகர்த்திச் செல்லும் கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்துள்ளார். படத்தை கட்டி இழுத்துச் செல்ல வேண்டிய மொத்த பொறுப்பும் ஏற்று நடித்திருக்கிறார். அதற்காகவே அவரைப் பாராட்டலாம்.
படத்தில் கதாநாயகி இல்லை என்பதால் ரொமான்ஸ் காட்சிகளும் கிடையாது.
ஆடுகளம் முருகதாஸ், கஜராஜ், சரவண சுப்பையா, திலீபன், ஜீவா ரவி, ராஜ் அய்யப்பா உள்ளிட்டோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
படத்தின் மிரட்டலான திரில்லிங், சஸ்பென்ஸ் நகர்வுக்கு இசையமைப்பாளர் கே.எஸ்.சுந்தரமூர்த்தியும் ஒளிப்பதிவாளர் ஜெய் கார்த்திக்கும் போட்டி போட்டு தங்கள் பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
இவர் தான் கொலைகாரன் என்ற சந்தேகத்தை சிலர் மீது விழவைத்து, பின்னர் அவர் இல்லை என்று மீண்டும் மீண்டும் திரைக்கதை வேகமெடுக்கும் வகையில் அற்புதமாக படமாக்கியிருக்கிறார் இயக்குநர் இளையராஜா கலியபெருமாள்.
ஆம்னி பஸ் வேகத்தில் ஓடும் கதைக்கு ஒருசில ஸ்பீட் பிரேக்கர்கள் இருந்தாலும், விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாத படம். அந்தவகையில், டென் ஹவர்ஸ் ரசிகர்களின் என்ஜாய் ஹவர்ஸ்.
– நிருபர் நாராயணன்