ஒய்நாட் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் சஷிகாந்த் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் டெஸ்ட். நயன்தாரா, மாதவன், சித்தார்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
தண்ணீரில் இருந்து பெட்ரோல் தயாரிக்கும் தனது திட்டத்தை வெற்றி பெறச் செய்ய போராடுகிறார் விஞ்ஞானி மாதவன். அவரது மனைவியாக நயன்தாரா. இத்தம்பதி குழந்தை பேறுக்காக காத்திருக்கிறது. ஆனால், ஆராய்ச்சிக்காக அனைத்தும் இழந்து பணம் இல்லாமல் திண்டாடுகிறார் மாதவன்.
அதேநேரத்தில், இந்திய கிரிக்கெட் வீரராக வரும் சித்தார்த்தை மிரட்டி காரியத்தை சாதிக்க அவரது மகன் மூலம் முயற்சி செய்கிறது சூதாட்டக் கும்பல். மகனுக்காக சித்தார்த் அணியின் வெற்றிவை விட்டுக் கொடுக்குமாறு மிரட்டுகின்றனர்.
விஞ்ஞானி மாதவனின் கண்டுபிடிப்பு வெற்றி பெற்றதா, சித்தார்த் நாட்டுக்காக மகனை விட்டுக் கொடுத்தாரா ஆகியவை படத்தின் மீதிக்கதை.
மாதவன் வழக்கம் போல் அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நயன்தாராவின் சிரிப்பும் நடிப்பும் டிரேட்மார்க் ரகம். ரசிகர்களை கொள்ளை கொள்கிறார்.
கிரிக்கெட் வீரர் வேடத்தில் சித்தார்த் சிக்ஸர் அடித்திருக்கிறார் என்றே கூறலாம். அவரது மனைவியாக வரும் மீரா ஜாஸ்மின் நீண்ட காலத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் தலைகாட்டிள்ளார். கோடை வெயிலுக்கு ஐஸ்கிரீம் போல் ஜில்லென காட்சியளிக்கிறார் மீரா.
நாசர், காளி வெங்கட் உள்ளிட்டோர் கச்சிதமான நடிப்பை தந்திருக்கிறார்கள்.
சக்திஸ்ரீ கோபாலனின் இசை படத்திற்கு உயிரோட்டமாக உள்ளது. விராஜ் சிங்கோஹில் ஒளிப்பதிவு அதற்கு உறுதுணையாக பயணிக்கிறது. கிரிக்கெட் மைதானத்தில் நாமும் இருப்பது போன்ற உணர்வை அவரது கேமரா ஏற்படுத்துகிறது.
மனித வாழ்க்கையில் எதிர்பாராத சம்பவங்கள் எப்படியெல்லாம் வாழ்க்கையை மாற்றிவிடுகிறது என்பது இருவேறு கதைகளை ஒருங்கிணைத்து, அழகாக சொல்லியிருக்கிறது டெஸ்ட் திரைப்படம்.
கிரிக்கெட் மேட்ச்சுக்கு நிகரான விறுவிறுப்புடன் படம் நகர்கிறது. டெஸ்ட் மேட்ச்சை ரசித்துப் பார்க்கலாம்.
– நிருபர் நாராயணன்