அறிமுக இயக்குனர் தம்பிதுரை மாரியப்பன் இயக்கியுள்ள திரைப்படம் ட்ராமா (Trauma).
விவேக் பிரசன்னா, சாந்தினி தம்பதிக்கு நீண்ட காலமாக குழந்தை பாக்கியம் இல்லை. அதற்காக மருத்துவத்துறையின் உதவியை நாடுகிறார்கள். இதில், அவர் கர்ப்பமாகிறார். ஆனால் அவர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது. அதன் மர்ம முடிச்சை அவிழ்ப்பதே படத்தின் மீதிக்கதை. இதனுடன் வேறு இரு கதைகளையும் அழகாக கோர்த்திருக்கிறார்கள்.
விவேக் பிரசன்னாவுக்கு அழுத்தமான கதாபாத்திரம். யாரும் ஏற்கத் தயங்கும் வேடத்தை ஏற்று தன் நடிப்பின் மூலம் கதாபாத்திரத்திற்கே மெருகேற்றி இருக்கிறார். அவருக்கு நிகராக குழந்தைக்கு ஏங்கும் ஒரு பெண்ணாக சிறப்பாக நடித்திருக்கிறார் சாந்தினி. அருமையான நடிப்புத்திறன் உள்ளது. இவருக்கு தமிழ் சினிமா இதுவரை ஏன் முக்கியத்துவம் தரவில்லை என தெரியவில்லை.
டாக்டர் என்ற போர்வையில் விபரீத வேலைகளில் ஈடுபடும் பிரதீப் கே விஜயன், காவல்துறை அதிகாரியாக வரும் சஞ்சீவ், நிழல்கள் ரவி உள்ளிட்ட அனைவரும் கச்சிதமாக நடித்துள்ளனர்.
அஜித் ஸ்ரீநிவாசனின் ஒளிப்பதிவும், ஆர்.எஸ். ராஜ்பிரதாப்பின் இசையும் கூட்டணி அமைத்து காதல், திகில் காட்சிகளில் சிறந்த பங்களிப்பை வழங்கி இருக்கிறார்கள்.
ஜெராக்ஸ் கடை, கம்ப்யூட்டர் இன்ஸ்டியூட் போன்று தற்போது நகரங்களில் செயற்கை கருத்தரிப்பு மையங்கள் முளைத்துள்ளன. இனி இங்கு சென்றால் தான் மனிதர்கள் குழந்தை பெற முடியும் என்ற கிளைமாக்ஸ் வசனம் அதிர்ச்சி தரும் உண்மையாக உள்ளது.
Trauma என்றால் அதிர்ச்சி என்று அர்த்தம். குழந்தையின்மை பிரச்சனையை மையமாக வைத்து, மருத்துவத்துறையின் அவலங்களை அம்பலப்படுத்தி உள்ளனர். அவை படத்தின் தலைப்புக்கு ஏற்ப நமக்கு அதிர்ச்சி தருகிறது.
மக்களின் முக்கியப் பிரச்சனை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், திகில் கலந்து அற்புதமாக படம்பிடித்து காட்டியிருக்கிறார் இயக்குனர் தம்பிதுரை மாரியப்பன்.
மக்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம்.
– நிருபர் நாராயணன்