தமிழகம் முழுவதும் தொடர் கனமழையால் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் நெற்பயிர் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளது. சம்பா, தாளடி பட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்களுக்கு, காப்பீடு பதிவு பெற டிசம்பர் 15-ம் தேதி வரை கால அவகாசம் தர வேண்டும் என டெல்டா விவசாயிகள் வலியுறுத்துகிறார்கள்.
சம்பா, தாளடி பட்டத்துக்கு டெல்டா விவசாயிகள் நவம்பர் 15-ம் தேதிக்குள் ப்ரீமியம் செலுத்தி, காப்பீடு செய்துகொள்ள வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கெனவே தொடர் கனமழை காரணமாக விவசாயிகள் நெருக்கடியான நிலையில் இருக்கும்போது, இப்படி அவசரப்படுத்துவது சரியா என விவசாயிகள் கேள்வி எழுப்புகின்றனர்.
தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக, காவிரி டெல்டா மாவட்டங்களில் சுமார் 1.20 லட்சம் ஏக்கர் சம்பா தாளடி நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன.
இந்நிலையில், தமிழ்நாடு அரசின் வேளாண்மைத்துறை சம்பா பருவ பயிர் காப்பீடு செய்ய நவம்பர் 15-ம் தேதிதான் கடைசி நாள் என்று அறிவித்துள்ளது. கடந்த அ.தி.மு.க ஆட்சியில் பயிர் காப்பீடு செய்ய கடைசி நாள் டிசம்பர் 15-ம் தேதி வரை அவகாசம் தரப்பட்து.
எனவே, இம்முறையும் பருவ பயிர்களை காப்பீடு செய்ய, டிசம்பர் 15 வரை அவகாசம் அளிக்க வேண்டும். மேலும் பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 30,000 ரூபாய் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.