தமிழர்களின் கலாச்சாரத்தை பறைசாற்றும் வகையில் புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் சபாநாயகர் இருக்கைக்கு அருகில் உயரமான கண்ணாடி பெட்டியில் செங்கோல் கம்பீரமாக காட்சியளிக்கிறது.
தலைநகர் டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது. தேவாரம் முழங்க செங்கோல் பிரதமர் மோடியிடம் வழங்கப்பட்டது. அப்போது திருவாவடுதுறை ஆதீனம் தலைமையில் பங்கேற்ற தமிழகத்தை சேர்ந்த ஆதீனங்களிடம் பிரதமர் மோடி ஆசிபெற்றார். இதையடுத்து நாடாளுமன்றத்தில் சோழர் மன்னர்களின் வரலாற்று சிறப்புமிக்க செங்கோலை பிரதமர் மோடி நிறுவினார்.
இதனை தொடர்ந்து புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். அவர் பேசியதாவது:
புதிய பாதையில் புதிய பயணத்தை நம் நாடு தொடங்கியுள்ளது. உலகமே இந்தியாவை உற்று நோக்குகிறது. இந்தியாவை உலக நாடுகள் இன்று நன்மதிப்போடு பார்க்கின்றன. இந்தியாவின் வளர்ச்சியில் தான், உலக நாடுகளின் வளர்ச்சியும் அடங்கியுள்ளது.
செங்கோல் புனிதமானது, முக்கியத்துவம் வாய்ந்தது. அதிகார மாற்றத்துக்கான அடையாளமாக செங்கோல் திகழ்கிறது. தமிழ்நாட்டு ஆதீனங்களின் ஆசியுடன் நாடாளுமன்ற வளாகத்தில் செங்கோல் வைக்கப்பட்டுள்ளது.
ராஜாஜி மற்றும் ஆதீனத்தை சேர்ந்தவர்களின் பங்களிப்புடன் செங்கோல் உருவாக்கப்பட்டது. 900 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் ஜனநாயக பாரம்பரியம் கடைபிடிக்கப்பட்டது.
மக்களவையில் புனிதமான செங்கோல் வைக்கப்பட்டுள்ளது. இந்த செங்கோல் நீதி, நேர்மை, தேசப்பற்று ஆகியவற்றை பிரதிபலிக்கும்.
சோழர் மரபிலிருந்து ராஜபாதையின் அடையாளமாக செங்கோல் திகழ்கிறது. செங்கோலை வழங்கிய ஆதீனங்களின் முன்பு தலை வணங்குகிறேன். செங்கோலின் கௌரவத்தை மீண்டும் பறைசாற்றுவோம்.
புதிய நாடாளுமன்றத்தில் கலாச்சாரமும், அரசியல் சாசனமும் இணைந்துள்ளது. எதிர்காலத்தில் எம்.பி.,க்களின் எண்ணிக்கை உயர உள்ளதை கருத்தில் கொண்டே இந்த பிரம்மாண்ட கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது.
புதிய நாடாளுமன்றம் ஜனநாயகத்தின் கோயிலாக விளங்கும்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
பிரதமர் மோடியின் தீரா முயற்சியால் பிரம்மாண்டமாக எழுந்திருக்கும் புதிய நாடாளுமன்றம், அடுத்து நாம் உலக நாடுகளுக்கு தலைமை தாங்கப் போகும் ஆளுமையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
செல்லும் திசையெல்லாம் தமிழ், தமிழர் புகழ் பரப்பும் பிரதமர் மோடி, சோழ மன்னர்களின் புதிய அவதாரம் என்றே கூறலாம்.
– நிருபர் நாராயணன்