சலவை மற்றும் ஈமச்சடங்கு தொழில் செய்யும் சேரன், கிராம அதிகாரி ஆகும் ஆசையில் அரசுப் பணிக்கான தேர்வு எழுத தயாராகிறார். இதை ஆதிக்க சாதியினர் தடுக்க, அரசுத் தேர்வு எழுதுவதற்கான கடைசி வாய்ப்பையும் தவறவிடுகிறார். பிறகு, வாழ்வாதாரத்திற்காக பால் வியாபாரம் செய்கிறார்.
இந்நிலையில், ஊர் முக்கியஸ்தர் மரணமடைய ஈமச்சடங்கு செய்ய அழைக்கின்றனர். சேரன் மறுத்துவிடுகிறார். இதனால் அவர் சந்திக்கும் பிரச்சனைகளையும் அவற்றை அவர் சமாளித்தாரா இல்லையா என்பதையும் கூறுவது தான் படத்தின் மீதிக்கதை.
யதார்த்த நாயகன் சேரன் மிகச்சிறந்த நடிப்பை தந்திருக்கிறார். அழுகை, அவமானம், வேதனை என அனைத்தையும் தனது உணர்வுப்பூர்வமான நடிப்பால் அவர் வெளிப்படுத்தியுள்ள விதம் ஈடுஇணையற்றது என்றே கூறலாம்.
சேரனின் மனைவியாக நடித்துள்ள ஸ்ரீபிரியங்கா, தங்கை வேடத்தில் வரும் தீபிக்ஷா ஆகியோர் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளனர். ஆனால், இருவரும் கதாபாத்திரத்திற்கு பொருந்தாத வகையில் அதிக மேக்கப்பில் வருவதை தவிர்த்திருக்கலாம். நாயகி ஸ்ரீபிரியங்கா கோலிவுட்டில் தனியிடம் பிடிக்கவும் வாய்ப்பு இருக்கிறது.
லால், வேல ராமமூர்த்தி, மயில்சாமி, ரவி மரியா, சுரேஷ் காமாட்சி ஆகியோர் சிறப்பான பங்களிப்பை வழங்கியிருக்கின்றனர்.
ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு படத்திற்கு மிகவும் உறுதுணையாக அமைந்திருக்கிறது. அப்படியே நம்மை கிராமத்தி்ற்கு அழைத்துச் சென்றுவிடுகிறது.
சாம்.சி.எஸ் இசையில் பாடல்கள் அருமை. திரும்ப கேட்கவும் தோன்றுகிறது.
குலத்தொழிலை வைத்து மனிதர்களை பிரித்துப் பார்க்கும் சமூக அவலத்தை கடுமையாக சாடியிருக்கிறது இப்படம்.
பாதிக்கப்பட்ட பட்டியலின மக்களை வன்முறைக்கு தூண்டும் வகையில் படங்களும் கருத்துக்களும் உலவும் இன்றைய உலகில், சட்டம் உறுதுணையாக இருப்பதை ஆழமாக சுட்டிக்காட்டி முன்னேற்றத்தை நோக்கி திசை காட்டுகிறது இப்படம். அந்தவகையில், இயக்குநர் இசக்கி கார்வண்ணனின் முயற்சி மிகவும் பாராட்டுக்குரியது.
மொத்தத்தில் தமிழ்க்குடிமகன் தமிழ் திரையுலகின் மிகச்சிறந்த குடிமகன்.
– நிருபர் நாராயணன்