தமிழ்க்குடிமகன் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இசக்கி கார்வண்ணன் இயக்கும் இப்படத்தில் இயக்குநர் சேரன் கதாநாயகனாக நடிக்கிறார். இதன் வெளியீட்டு விழாவில் நடிகர் சரத்குமார், இயக்குநர்கள் தங்கர்பச்சான், பொன்வண்ணன், மாரி செல்வராஜ், அமீர் ஆகியோர் பங்கேற்றனர்.
இவ்விழாவில் பேசிய நடிகர் சரத்குமார், குலத்தொழில் முறையை உடைத்தெறியும் படமாக இது இருக்கும். சமத்துவத்தை வலியுறுத்தும் தமிழ்க்குடிமகன் படத்தை 100 நாள் ஓடச் செய்ய வேண்டும் என குறிப்பிட்டார்.
தங்கர்பச்சான் பேசுகையில், தமிழ்க்குடிமகன் போன்ற தரமான படங்களுக்கு ரசிகர்கள் ஆதரவளித்து ஊக்கப்படுத்த வேண்டும் என்றார்.
நடிகர் சேரன் பேசுகையில், இப்படத்தை ரசிகர்கள் தியேட்டருக்கு வந்து பார்க்க வேண்டும். கிராமங்களில் இன்னும் மிச்சமிருக்கும் சாதி வெறியை ஒழிக்க வேண்டும். இதில் சாதி ஒழிப்பு குறித்து வலியுறுத்தியுள்ளோம் என குறிப்பிட்டார்.
இப்படம் தமிழ் திரையுலகில் பெரியளவில் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
– நிருபர் நாராயணன்