ஜூன் 5, தமிழக டிஜிபி டாக்டர் சைலேந்திர பாபு ஐ.பி.எஸ். பிறந்த தினம். நேரடி ஐபிஎஸ் அதிகாரியான இவரது படிப்பு MSc. M.A, BGL, MBA, Ph.D.
அதுமட்டுமல்ல எழுத்தாளர், ஊக்கப் பேச்சாளர், நீச்சல் வீரர், சைக்கிள் வீரர் என பன்முகத் திறன் கொண்டவர் “சிங்கம்” சைலேந்திர பாபு ஐபிஎஸ்.
“நீங்களும் ஐபிஎஸ் அதிகாரி ஆகலாம்” உட்பட பல்வேறு புத்தகங்களையும் எழுதியுள்ளார். இவை இன்றைய இளைஞர்களுக்கு ஊக்கமளிப்பதாக உள்ளது. சென்னை புத்தகக் கண்காட்சியில் கடந்த பல ஆண்டுகளாக இவரது புத்தகங்கள் அதிகம் விற்கப்படுவதை புத்தக விற்பனையாளர்களே தெரிவித்துள்ளனர்.
நடிகர் சூர்யாவின் சிங்கம் திரைப்படத்திற்கு ரோல் மாடலே இவர் தான் என்பது பலருக்கும் தெரியாத உண்மை. ஆம், இவரது கடந்த கால அதிரடி நடவடிக்கைகளின் உண்மைச் சம்பவங்களின் தழுவலே சிங்கம் திரைப்படத்தின் வெற்றிக்கும் அடித்தளமாக இருந்தது.
எஸ்.பி முதல் டிஜிபி வரை.. !
சைலேந்திரபாபு பிறந்தது கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை. 58 வயது நிறைந்த இவர் 1987-ம் ஆண்டு பேட்ச்சை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி. விவசாயத்தில் முதுகலை அறிவியல் பட்டம், எம்பிஏ மற்றும் முனைவர் பட்ட படிப்புகளை முடித்தவர். சைபர் கிரைம் ஆய்வுப் படிப்பையும் முடித்துள்ளார். 1962ம் ஆண்டு ஜூன் மாதம் 5ம் தேதி பிறந்த அவர் தனது 25-வது வயதில் ஐபிஎஸ் அதிகாரியாக 1987ம் ஆண்டு தமிழக காவல் துறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சென்னை காவல்துறை வடக்கு மண்டல இணை ஆணையராக பணியாற்றிய போது 2004ம் ஆண்டு கட்டப்பஞ்சாயத்து, ரவுடிசம் மற்றும் மாமூல் வசூலிப்பதில் கொடி கட்டிப் பறந்த தாதாக்கள் ‘காட்டான்’ சுப்பிரமணி, ‘கேட்’ ராஜேந்திரன், ‘பூங்காவனம்’ ராமமூர்த்தி, ‘மாட்டு’ சேகர், ‘டைசன்’ சேகர், ‘பாக்சர்’ வடிவேல், வீரமணி போன்ற ரவுடிகளின் கதைக்கு முடிவுரை எழுதியவர்.
2015ம் ஆண்டு சென்னையில் வெள்ளம் சூழ்ந்த போது சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், பள்ளிக்கரணை, போரூர், நந்தம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் கடல் போல சூழ்ந்து கொண்டது. உடனடியாக களத்தில் இறங்கிய சைலேந்திரபாபு கடலோர பாதுகாப்பு குழும நீச்சல் வீரர்களுடன் வெள்ளக் களத்தில் குதித்தார். வெள்ளம் சூழ்ந்த இடங்களுக்கு நீந்தியே சென்று வீட்டுக்குள் சிக்கிய பலரை மீட்டது இன்னும் பாராட்டை பெற்றது.
25 நிமிட போட்டியில் வெற்றி பெற 25 வருட பயிற்சி தேவைப்படும், மாணவர்களுக்கும் இது பொருந்தும் என்ற சைலேந்திரபாபுவின் வார்த்தைகளில் அவரது வாழ்க்கையின் வெற்றியும் அடங்கும்.
30 ஆண்டுகால காவல்துறை அனுபவத்தில் சைலேந்திரபாபு பல அரிய சாதனைகளை நிகழ்த்திய அவரது கடமை உணர்வை பாராட்டி குடியரசுத் தலைவர் பதக்கம், உயிர்காப்பு நடவடிக்கைக்காக பாரதப் பிரதமரின் பதக்கம், சந்தன கடத்தல் வீரப்பன் அதிரடிப்படையில் பணியாற்றி வீரதீர செயல்கள் ஆற்றியதற்காக முதல்வர் பதக்கமும் பெற்றுள்ளார்.
இன்று ஹேப்பி பர்த்டே கொண்டாடும் தமிழக டிஜிபி டாக்டர். சைலேந்திர பாபு அவர்களுக்கு “நிருபர் டைம்ஸ்” பத்திரிகையின் சார்பில் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
– நிருபர் நாராயணன்