வங்கியில் நுழையும் கொள்ளையர்களிடம் இருந்து வாடிக்கையாளர்களையும், வங்கி ஊழியர்களையும் மீட்பதும், தன் மீது விழும் தீவிரவாதி முத்திரையை எப்படி நீக்குகிறார் என்பதுமே துணிவு படத்தின் ஒன்லைன் ஸ்டோரி.
வெள்ளை தாடியில் அஜித்தின் அழகு மேலும் கூடியிருக்கிறது. காட்சிக்கு காட்சி ஆக்சன் தான். ரசிகர்களின் கைத்தட்டல்களும் விசில் சத்தமும் அரங்கை அதிர வைக்கின்றன. ஜாலி நடனம், வில்லன் சிரிப்பு, நிதானமான வசனம், போலீசுக்கு தண்ணி காட்டுவது என சகலத்திலும் சிக்ஸர் அடித்திருக்கிறார் அஜித்.
கதாநாயகி கேரளத்து அழகுக்கிளி மஞ்சு வாரியர் கொடுத்த வேலையை மிக கச்சிதமாக செய்திருக்கிறார். சண்டை காட்சிகளிலும் லேடி அஜித்தாக அசத்துகிறார்.
போலீஸ் கமிஷனர் வேடத்தில் வழக்கம் குறை சொல்லமுடியாத யதார்த்த நடிப்பை வழங்கியிருக்கிறார் இயக்குநர் சமுத்திரகனி. வில்லன் ஜான் கொக்கேன் செம ஸ்டைலிஷாக நடித்துள்ளார். இதுபோல், மோகன சுந்தரம் நிருபர் வேடத்தில் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்திருக்கிறார்.
ஜிப்ரான் இசையில் ‘சில்லா சில்லா’ பாடலுக்கு தியேட்டரில் விசில் சத்தம் காதைப் பிளக்கிறது. பின்னணி இசையிலும் மாஸ் காட்டியிருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் நீரவ்ஷாவின் கேமரா கோணங்கள் மிரட்டலானவை, அற்புதமான காட்சிப் படைப்பு.
அப்பாவி மக்களின் பணம் எப்படி கண்ணுக்குத் தெரியாமல் ஏமாற்றுகிறார்கள் என்பதை ஒரு விழிப்புணர்வு மெசேஜாகவும் படத்தில் வழங்கியிருக்கிறார்கள்.
இயக்குநர் வினோத்துக்கு இனி ஏறுமுகம் தான் என்று துணிவுடன் கூறலாம்.
மொத்தத்தில் தல ரசிகர்களுக்கு துணிவு ஒரு சர்க்கரைப் பொங்கல்.
– நிருபர் நாராயணன்