“வாய்தா” திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் பவுலின் ஜெஸிகா. 29 வயதான இவர் சில படங்களில் துணை நடிகையாகவும் நடித்துள்ளார். சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்த இவர், தொடர்ந்து சினிமா வாய்ப்பு தேடி வந்துள்ளார்.
இந்நிலையில், தயாரிப்பாளர் சிராஜுதீன் என்பவர், ஜெஸிகாவுக்கு படவாய்ப்பு தருவதாகவும், காதலிப்பதாகவும் கூறி நெருங்கிப் பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, கடந்த 18-ம் தேதி பவுலின் ஜெஸிகா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது, தமிழ் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலைக்கு முன்னதாக நடிகை ஜெஸிகா தனது காதலர் சிராஜுதீனுடன் நீண்ட நேரம் செல்போனில் பேசியிருக்கிறார். இதையடுத்து அவருக்கு கோயம்பேடு போலீஸார் விசாரணைக்கு வருமாறு சம்மன் அனுப்பியுள்ளனர்.
நடிகை ஜெஸிகாவின் தற்கொலைக்கு இவர் தான் காரணமா அல்லது வேறு யாரேனும் காரணமா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்தவகையில் நடிகை ஜெஸிகா பயன்படுத்திய 3 செல்போன்களை கைப்பற்றி சைபர் க்ரைம் மற்றும் தடயவியல் சோதனைக்கு அனுப்பியுள்ளனர்.
இந்நிலையில், ஜெஸிகாவின் ஐ-போன் ஒன்றை காணவில்லை என அவரது சகோதரர் போலீஸாரிடம் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த நான்காவது போனில் முக்கிய ஆதாரங்கள் ஏதேனும் இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதால், ஜெஸிகாவின் ஐபோன் குறித்து அவரது குடும்பத்தினரிடமும் நண்பர்களிடமும் விசாரித்து வருகின்றனர்.
நடிகை ஜெஸிகா யூ டியூப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் ஆர்வத்துடன் செயல்பட்டு வந்திருக்கிறார். இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஒரு லட்சம் பேருக்கு மேல் பாலோ செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் முகப்பு பக்கத்தில் Smile Always என்ற வாசகத்தை வைத்திருக்கிறார். ஆனால், அவரோ தனது மரணத்தால் பிறரை அழவைத்து விட்டார்.