சிவகங்கை மாவட்டம் கட்டிக்குளம் கிராமத்தின் அரசு மேல்நிலைப்பள்ளியின் சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியரான கிரேசியஸ் நல்லாசிரியர் விருது பெற்றுள்ளார். ஆசிரியர் தினத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் இருந்து இவ்விருது பெற்று தன்னலம் கருதாத சேவையால் ஆசிரியர் சமூகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.
கட்டிக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் பல்வேறு துறைகளில் சாதனை படைக்கும் அளவுக்கு முன்னேறியுள்ளனர். ஏராளமானோர் வெளிநாடுகளிலும் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பலருக்கு சத்தமின்றி உதவிக்கரம் நீட்டி அவர்களை உயரச் செய்தவர் கிரேசியஸ்.
தனியார் பள்ளிகளுக்கு நிகராக கட்டிக்குளம் பள்ளியை புதுப்பிக்கவும் வண்ணம் தீட்டவும், தனது சொந்தப் பணத்தை செலவு செய்திருக்கிறார். ஆம், டைல்ஸ் போடவும், வண்ணம் பூசவும் 2 லட்சம் ரூபாய் சொந்தப் பணத்தை வழங்கியிருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா. அதுதான் உண்மை. மேலும், பள்ளியில் குடிநீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகளையும் செய்ய உறுதுணையாக நின்றிருக்கிறார். இதுபோன்று எண்ணற்ற உதவிகளை நீண்ட காலமாகவே செய்து வருகிறார்.
இந்த பள்ளி மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட போது, பள்ளி வளாகத்தின் விரிவாக்கத்திற்காக இரண்டரை ஏக்கர் நிலத்தை அதன் உரிமையாளர்களிடம் இருந்து தனது தனிப்பட்ட முயற்சியில் பெற்றுத் தந்தவர் கிரேசியஸ்.
தனது பள்ளி மாணவர்களை போட்டிகளில் பங்குபெறச் செய்து வெற்றிகளையும் வாங்கி பள்ளிக்கு பெருமை சேர்த்திருக்கிறார். மாணவர்களை எப்போதும் தட்டிக் கொடுத்து ஊக்கமளித்துக் கொண்டிருப்பது இவரது தனிச்சிறப்பு.
பள்ளியின் அனைத்து விழாக்களுக்கும் முன் நின்று ஆர்வத்துடன் ஏற்பாடுகள் செய்து நடத்தி வருகிறார். மாணவர்களின் கவனம் சிதறாமல் பாடம் கற்பிப்பதில் வல்லவர்.
2002 செப்டம்பரில் பதவி உயர்வு பெற்று கட்டிக்குளத்தில் இருந்து சாலை என்னும் கிராமத்திற்கு பணி மாறுதலில் சென்றார். ஆனால், ஊர் மக்களோ ஆசிரியர் மீதான அளவற்ற பாசத்தால் கல்வித்துறை அதிகாரியிடம் மனு கொடுத்து, 2003 ஜூன் மாதம் மீண்டும் தங்கள் பள்ளிக்கே கிரேசியஸ் ஆசிரியரை அழைத்து வந்துவிட்டனர்.
இவரது கல்விச் சேவையை நாம் உணர்ந்துகொள்ள இந்த ஒற்றை சம்பவமே போதும்…!
35 ஆண்டுகளாக மாணவர்களுக்கு கல்வியுடன் அன்பும் அரவணைப்பும் காட்டி ஊக்கப்படுத்தும் ஆசிரியர் “கிரேசியஸ், தி கிரேட்” என்ற அடைமொழிக்கு மிகவும் பொருத்தமானவர்.
– புலித்தேவன்