காதல் மனைவி மற்றும் மகளுடன் ஒரு வாடகை வீட்டில் வசிக்கிறார் ஹீரோ ஹரிஷ் உத்தமன்.
அந்த குடியிருப்பில் வசிப்பவர்கள் அனைவரும் ஒவ்வொரு சனிக்கிழமையும் ஒன்றாக இணைந்து வீட்டின் மொட்டை மாடியில் பாட்டு பாடி விளையாடுவது வழக்கம். இதுதொடர்பாக கதாநாயகனுக்கும் போலீசுக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது.
இந்நிலையில், மறுநாள் வீட்டிற்கு வரும் மனைவியின் பெற்றோரை வரவேற்க ஏற்பாடுகளை செய்கின்றனர். அப்போது கடைக்கு செல்லும்போது, மகளின் கையில் இருந்த செல்போனை பறிக்க முயன்ற நபரை கதாநாயகி ஷீலா தாக்கியதில் அவர் இறந்து போகிறார். அவரது உடலை மறைத்து வைக்கிறார்கள்.
அதே நேரத்தில், ஆட்டோ ஓட்டுநரை தாக்கிய வழக்கில் ஹரிஷ் உத்தமனை கைது செய்ய போலீஸ் வீட்டு வாசலில் வந்து நிற்கிறது. காதல் திருமணத்தை விரும்பாத மாமனார், மாமியாரும் சமரசம் ஆகி வீட்டுக்கு வருகிறார்கள்.
இந்த பிரச்சனைகளை ஹரித் உத்தமன் – ஷீலா தம்பதி எப்படி எதிர்கொள்கின்றனர் என்பது தான் படத்தின் மீதிக்கதை.
அருவி படத்தில் நடிப்பில் மிரட்டிய மதன் இந்த படத்தை இயக்கியுள்ளார். மேலும், போலீஸ் அதிகாரி வேடத்திலும் அசத்தலாக நடித்துள்ளார்.
கதாநாயகன் ஹரிஷ் உத்தமனின் நடிப்பு அற்புதம். அவரது மனைவியாக நடித்துள்ள ஷீலா கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார். வக்கீலாக வரும் வசந்த் மாரிமுத்து அசத்தியிருக்கிறார்.
ராபர்ட் சற்குணத்தின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்க்கிறது. வினோத்ராஜாவின் ஒளிப்பதிவு கதாபாத்திரங்களின் உணர்வுகளை அற்புதமாக பதிவு செய்திருக்கிறது.
ஒரு வீடு, பர்னிச்சர், மொட்டை மாடி, தெரு, மளிகைக் கடை என இதற்குள்ளாகவே மொத்த படத்தையும் முடித்திருக்கிறார்கள். ஆனாலும், திரைக்கதையில் விறுவிறுப்பும் எதிர்பார்ப்பும் நிறைந்திருப்பதால் மசாலா படங்களுக்கு இணையாகவே வந்திருக்கிறது.
நூடுல்ஸ் திரைப்படம் பெயருக்கு ஏற்றார் போல் சுவையான சிற்றுண்டி தான்… ருசிக்கலாம், ரசிக்கலாம்.
– நிருபர் நாராயணன்