தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகேயுள்ள வி.சாலையில் ‘வெற்றி கொள்கைக் திருவிழா’ என்ற பெயரில் இன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது.
குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் என அனைத்து தரப்பு மக்களின் ஆதரவையும் பெற்ற நடிகராக வளம் வந்த இளைய தளபதி விஜய், விக்கிரவாண்டியில் அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார். மாநிலம் முழுவதும் இருந்து திரண்டு வந்த தொண்டர்கள் கூட்டத்தால் விழுப்புரம் மாவட்டமே குலுங்கியது. அங்குள்ள தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 20 கி.மீ. தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மாலை சரியாக 4.05 மணிக்கு மாநாட்டுத் திடலில் அமைக்கப்பட்டிருந்த ராம்ப் எனப்படும் 800 மீட்டர் நடைபாதையில் வணக்கம் கூறியபடியே ஸ்டைலாக நடந்து வந்தார் விஜய். மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆரவாரம் செய்த தொண்டர்கள் கட்சிக் கொடியை அவரை நோக்கி வீச, அதையும் கேட்ச் பிடித்து அழகாக அணிந்து கொண்டார் தளபதி. அப்போது கட்சியினரின் கைத்தட்டல்களில் மாநாட்டு வளாகமே அதிர்ந்தது.
தொண்டர்களின் அன்பு வெள்ளத்தில் மிதந்தபடி மாநாட்டு மேடை ஏறிய விஜய், உணர்ச்சிப்பெருக்கில் கண்ணீர் விடும் நிலைக்கு ஆளாக்கப்பட்டார். இதையடுத்து, தமிழ் மன்னர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், மொழிப்போர் தியாகிகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். த.வெ.க. மாநாட்டு திடலில் 100 அடி உயர கம்பத்தில் கட்சிக் கொடியை விஜய் ஏற்றிவைத்தார். ரிமோட் மூலம் மேடையில் இருந்தவாறே த.வெ.க. தலைவர் விஜய் கொடியேற்றி வைத்தார்.
தமிழக வெற்றிக் கழக பொருளாளர் வெங்கட்ராமன் தலைமையில் விஜய் உட்பட அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். ஒற்றுமை, சமத்துவம், சகோதரத்துவம், நல்லிணக்கத்தை பின்பற்றுவோம் என உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதையடுத்து, விஜய்க்கு பகவத் கீதை, திருக்குரான், பைபிள், அரசியல் சாசனம் ஆகியவை கட்சி நிர்வாகிகளால் வழங்கப்பட்டது.
மாலை 5.30 மணியளவில் த.வெ.க. தலைவர் விஜய் தன் பெற்றோர் எஸ்.ஏ.சந்திரசேகரன், ஷோபாவிடம் ஆசி பெற்ற பின் தனது மாநாட்டு உரையை தொடங்கினார். அவர் பேசிதாவது:
ஒரு குழந்தை முதன்முதல் அம்மா என கூறும்போது ஏற்படும் சிலிர்ப்பு எப்படி என அம்மாவால் சொல்ல முடியும், குழந்தையால் எப்படி சொல்ல முடியும். அந்த சிலிர்ப்பை சொல்ல முடியாது இல்லையா அப்படி ஒரு உணர்வோடு நிற்கிறேன். அப்போது ஒரு பாம்பு வந்து நின்றால், அக்குழந்தை பாம்பை பார்த்து சிரித்துகொண்டே தன் கையில் பிடித்து விளையாடும். பாசமே தெரியாத குழந்தைக்கு பயம் மட்டும் எப்படி தெரியும். அந்த பாம்பு அரசியல். அந்த பாம்பை பிடித்து நான் விளையாட ஆரம்பித்துள்ளேன்.
அரசியலில் பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை. எதற்காக அரசியலுக்கு வந்துள்ளோமே அதை நிச்சயம் செய்து முடிப்போம்; அதுவரை நெருப்பாக இருப்போம்.
நடிகர்கள் அரசியலுக்கு வந்தால் கூத்தாடிகள் என விமர்சிப்பது எம்ஜிஆர், என்டிஆர் காலம் முதலே உள்ளது. அந்த கூத்தாடிகள்தான் 2 மாநிலங்களிலும் மறைந்த பிறகும் மக்கள் மனதில் வாழ்கின்றனர்.
ஆரம்பத்தில் சினிமாவுக்கு வந்தபோதும் முகம் சரியில்லை; முடி சரியில்லை என கூறினார்கள். ஆனால் எதையும் பொருட்படுத்தாமல் உழைத்து முன்னேறியவன் நான்.
என்னை நடிகனாகவும், பொறுப்புள்ள மனிதனாகவும், அரசியல் கட்சி தொண்டனாகவும் மாற்றியது மக்கள்தான். என்னிடம் இருப்பது நேர்மையும் உழைப்பும்தான். நடிப்புத் துறையில் உச்சத்தில் இருக்கும்போது நடிப்பை விட்டுவிட்டு அதற்கான ஊதியத்தை விட்டுவிட்டு மக்களை நம்பி வந்துள்ளேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
த.வெ.க. மாநாட்டிற்கு 8 லட்சம் பேருக்கு மேல் வந்திருப்பதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜய் கட்சியின் மாநாட்டுக்கு திரண்ட கூட்டம் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என அனைத்து தரப்பினரையும் பீதியில் ஆழ்த்தியுள்ளது என்பதே அரசியல் வட்டாரத்தில் பரபரப்பான பேச்சாக உள்ளது.
– நிருபர் நாராயணன்