தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி, ஆன்மீகம், சுற்றுலாவில் முக்கிய மாவட்டமாக தூத்துக்குடி விளங்குகிறது. தென் மாவட்டங்களில் அடிதடி அரசியல் முதல் அராஜக ரவுடியிசம் வரை கொடிகட்டி பறக்கும் என்பதால், குறிப்பாக தூத்துக்குடி, நெல்லை மாவட்ட காவல் நிலையங்களில் பணியாற்ற பிற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை.
அடிதடி, கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களில் குற்றவாளிகளை பிடிப்பதும், அவர்களுக்கு தண்டனை பெற்று தருவதும் என்பது இப்பகுதிகளில் பெரும் சவாலானதாக இருக்கும். இதனால், தூத்துக்குடி தென் பாகம், சிப்காட் போன்ற காவல் நிலையங்களில் பணியாற்றும் அதிகாரிகள் கடும் நெருக்கடிக்கு ஆளாக நேரிடும். தப்பித்தவறி யாரேனும் நேர்மையான காவல்துறை அதிகாரிகள் வந்துவிட்டால், அரசியல்வாதிகள், வழக்கறிஞர்கள் இணைந்து சதி செய்து அவர்களை பழிவாங்கும் போக்கு நிலவுகிறது. அப்படித்தான் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் முத்தமிழ் அரசன் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
நேர்மையான அதிகாரி என பெயர் பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் முத்தமிழ் அரசன், கடந்த குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியரிடம் விருது பெற்றார். மேலும், தூத்துக்குடி எஸ்.பி., நெல்லை சரக டி.ஐ.ஜி. ஆகியோர் அவரை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தனர். பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து மக்கள் நலனுக்காக துடிப்பாக செயல்பட்டு வந்தார் எஸ்.ஐ. முத்தமிழ் அரசன். உதாரணமாக, சமீபத்தில் ரேஷனில் மண்ணெண்ணெய் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தியபோது, அந்த பிரச்சனையை திறமையாக கையாண்டு போராட்டத்தை வாபஸ் பெற வைத்ததுடன், அவர்களுக்கு உடனடியாக மண்ணெண்ணெய் கிடைக்கவும் ஏற்பாடு செய்தார் முத்தமிழ் அரசன்.
இந்நிலையில், தூத்துக்குடி டவுன் ஏஎஸ்பி மதன், சப்-இன்ஸ்பெக்டர் முத்தமிழ் அரசன் ஆகியோருக்கு எதிராக வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தியதன் எதிரொலியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது உள்ளூர் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
துடிப்பான நேரடி ஐபிஎஸ் அதிகாரியான தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், சட்டத்தின் வழியில் செயல்பட்ட எஸ்.ஐ. முத்தமிழ் அரசனை மீண்டும் தென்பாகம் காவல் நிலையத்தில் பணியமர்த்த வேண்டும் என்பதே தூத்துக்குடி மக்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
நீதி வெல்லட்டும்…! மக்கள் காத்திருக்கிறார்கள்…!!
– நிருபர் நாராயணன்