தென் கிழக்குச் சீமையான சிவகங்கை அருகேயுள்ள மரக்காத்தூர் கிராமம் விவசாயத்தில் செல்வச் செழிப்பாக திகழ்ந்த காலம் கரைந்து, காலப்போக்கில் சீமைக்கருவேல மரங்களின் அதீத வளர்ச்சியால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கிறது. இதை பயன்படுத்தி செங்கல் சூளை அமைத்து ஊர் மக்கள் மூலம் லட்சம் லட்சமாக சம்பாதிக்கிறார் கேஜிஎப். ராம்.
விமலும், சூரியும் வெட்டியாக ஊர் சுற்றி வர, அட்டகாசம் தாங்க முடியாமல் ஊரே செலவு செய்து விமலை மலேசியாவுக்கு அனுப்பி வைக்கிறது. அங்கு அவருக்கு வேலை பறிபோய் விடுகிறது.
விமலை மீண்டும் கிராமத்தினர் ஏற்கும் வகையில், அவருக்கு லாட்டரியில் 10 கோடி ரூபாய் விழுந்துள்ளதாக நண்பன் பொய்யை பரப்புகிறான். மரக்காத்தூர் மக்களும் அதை நம்பி அவருக்கு அவரை ஊராட்சி மன்ற தலைவராக ஆக்கி அழகு பார்க்கின்றனர். நடுவே காதலும் சேர்ந்து கொள்ள, நம் கதாநாயகன் அந்த கிராமத்தை எப்படி மாற்றுகிறார் என்பதை கலகலப்பாக கூறியிருக்கிறார்கள்.
விமல் படம் என்றாலே ரசித்து, சிரித்துப் பார்க்கலாம் என்ற நம்பிக்கை பொய்யாகவில்லை. சும்மா வெளுத்து வாங்கியிருக்கிறார். அவருக்கு நிகராக அண்ணன் சூரி நடிப்பும் அருமை. படத்திற்கு இவர்களின் கூட்டணி பெரிய பலம்.
கதாநாயகி ஸ்ரீதா அழகு தேவதையாக ஜொலிக்கிறார். பாடல்களிலும் ரசிக்க வைத்திருக்கிறார். வில்லனாக வரும் கேஜிஎப்.ராம் கச்சிதமாக நடித்து அசத்தியிருக்கிறார்.
தேவதர்ஷினி, நமோ நாராயணன், விநோதினி வைத்தியநாதன் உள்ளிட்டோரும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
ராமலிங்கத்தின் ஒளிப்பதிவும், அதற்கு உறுதுணையாக ஜான் பீட்டரின் பின்னணி இசையும் கிராமத்துக் கதையில் மண்வாசம் வீசச் செய்திருக்கிறது. “கொட்டுதே வானம்” பாடல் வரிகள் அருமை.
கருவேல மரங்களுக்கு எதிராக உயர்நீதிமன்றம் வரை சென்று பலரும் போராடி இருக்கிறார்கள். இந்த படத்தில் அந்த மரங்கள் விவசாயத்திற்கு எப்படி கேடு விளைவிக்கிறது என மக்களுக்கு தெளிவுபடுத்தி இருக்கிறார்கள். அழிந்து வரும் வேளாண்மையை தாங்கிப் பிடிக்கும் வகையில் இப்படத்தை நேர்த்தியாக கையாண்டுள்ள இயக்குநர் நந்தாவுக்கு பாராட்டுகள்.
“படவா” விவசாயம் குறித்த ஒரு பாடம். இது ரசிகர்களையும் வெல்லும், விருதையும் வெல்லும்.
– நிருபர் நாராயணன்