ஒரு நாடகக் நடிகனின் வாழ்வில் நிகழும் சம்பவங்களையும் திருப்பங்களையும் அழகுற பதிவு செய்திருக்கிறது “பபூன்”.
கால ஓட்டத்தில் கரைந்து வரும் நாடகத் தொழிலில் போதிய வருமானம் இல்லாததால், வெளிநாட்டுக்கு சென்று சம்பாதிக்க நாயகன் குமரனும் நண்பன் முத்தையாவும் திட்டமிடுகின்றனர். ஆனால் அதற்கு பணம் இல்லாத நிலையில் தற்காலிகமாக லாரி ஓட்டும் பணிக்கு செல்கின்றனர். அவர்கள் கொண்டு செல்வது போதைப்பொருள் என்பது அவர்களுக்கு தெரியாத சூழலில் போலீசாரிடம் சிக்குகின்றனர். அதன் பிறகு அவர்களின் நிலை என்ன? தங்களின் லட்சியத்தை அடைந்தார்களா என்பது படத்தின் மீதிக்கதை.
இதில், கதாநாயகன் வைபவ் உணர்ச்சிகரமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அவரது நண்பன் முத்தையாவாக வரும் பாடகர் ஆத்தங்குடி இளையராஜா இப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கால் பதித்திருக்கிறார்.
இலங்கை அகதியாக வரும் கதாநாயகி அனேகா, பூஜா ஹெக்டா சாயலில் உள்ளார். இப்படத்தில் பூஜா ஹெக்டே… சாரி… அனேகா கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இவர் மூலம் அகதிகளின் பிரச்சனைகளை எடுத்துரைக்க முயற்சி எடுத்துள்ளார் இயக்குநர் அசோக் வீரப்பன்.
அதேநேரத்தில், கதையின் மையப்புள்ளியான விளிம்பு நிலையில் உள்ள நாடக கலைஞர்களின் வாழ்க்கையை யதார்த்தமாக காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குநர். அவரது கதை நகர்வுக்கு உறுதுணையாக, சந்தோஷ் நாராயணின் பின்னணி இசையும், பாடல்களும் பலம் சேர்க்கும் வகையில் அருமையாக அமைந்துள்ளது. “மடித்து வச்ச வெத்தலை” பாடலை தியேட்டரை விட்டு வெளியே வரும் ரசிகர்கள் முணுமுணுத்தபடி செல்வதே சந்தோஷ் நாராயணின் இசையின் வெற்றிக்கு அத்தாட்சி.
நடிகர்கள் ஜார்ஜ், ஆடுகளம் ஜெயபாலன், நரேன் ஆகியோரும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளனர்.
கடல் மற்றும் கடலோரப் பகுதிகளை காட்சிப்படுத்துவதில், கேமராவில் கவிதை எழுதியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் தினேஷ் புருஷோத்தமன்.
மொத்தத்தில் குடும்பத்துடன் தியேட்டருக்கு சென்று பார்க்க்கூடிய படம் “பபூன்”.