நடிகர் வெற்றி, பிக்பாஸ் புகழ் நடிகை ஷிவானி ஆகியோரின் நடிப்பில் வெளியாகியுள்ள படம் “பம்பர்”.
ஜாலி பேர்வழியான கதாநாயகன் சபரிமலை செல்லும் நிலையில், 10 கோடி பம்பர் லாட்டரி சீட்டு ஒன்றை வாங்குகிறார். ஆனால், அதை அங்கேயே விட்டுவிட்டு சொந்த ஊருக்கு வந்து விடும் சூழலில், அதே சீட்டுக்கு பம்பர் பரிசு விழுகிறது. ஒருவழியாக அந்த லாட்டரியும் அவருக்கு வந்து சேர, அதை வைத்து தான் காதலிக்கும் மாமன் மகளை கைப்பிடித்தாரா, ஏழ்மையில் இருந்து மீண்டாரா என்பது தான் படத்தின் சுருக்கமான கதை.
கதாநாயகன் வெற்றி மிக யதார்த்தமான கனகச்சிதமான நடிப்பை வழங்கியிருக்கிறார். கோலிவுட்டில் இவர் ஒரு ரவுண்ட் வர வாய்ப்பிருக்கிறது.
சமூக வலைத்தளங்களில் லட்சக்கணக்கான ரசிகர்களை தன் துள்ளல் நடனத்தாலும் அழகாலும் ஈர்த்திருக்கும் ஷிவானி இப்படத்தில் அவர்களுக்கு பாவாடை தாவணியில் அழகுப் பதுமையாக வந்து பம்பர் பரிசு வழங்கியிருக்கிறார்.
பைனான்சியர் வேடத்தில் யூடியூப் பிரபலம் அண்ணன் ஜி.பி.முத்து செம பொருத்தம். லாட்டரி பரிசை வாங்கச் செல்லும் ஹீரோவுக்கு தன் காரை தந்து இதயங்களை வென்று தனித்து நிற்கிறார். அண்ணனின் ரசிகர் பட்டாளத்தின் விசில் சத்தம் தியேட்டரில் சும்மா பறக்கிறது.
லாட்டரி சீட்டு விற்கும் இஸ்லாமிய பெரியவராக நடித்துள்ள ஹரீஷ் பெராடியின் நடிப்புக்கு எழுந்து நின்று கைதட்டலாம்.
பணத்தின் அருமையை மாறுபட்ட கோணத்தில் அற்புதமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் செல்வகுமார்.
தூத்துக்குடி, சபரிமலை என அப்பகுதிகளின் காட்சிகளை அப்படியே தன் கேமராவுக்குள் கொண்டு வந்திருக்கிறார் வினோத் ரத்னசாமி.
அசத்தலான பின்னணி இசையால் யார் இவர்? என கேட்க வைத்திருக்கிறார் இசைமையப்பாளர் கிருஷ்ணா.
சிறிய பட்ஜெட் படம் என்றாலும் தியேட்டருக்கு குடும்பத்துடன் சென்று ரசிக்கும் வகையில் படத்தை கொடுத்திருக்கிறார்கள். அந்தவகையில் ரசிகர்களுக்கு இது நிஜத்திலும் பம்பர் பரிசுதான்.
– நிருபர் நாராயணன்