பட்டப்படிப்பு முடித்த இளைஞர் சங்ககிரி ராஜ்குமார் சினிமா கனவுகளுடன் வேறு வேலைக்குச் செல்லாமல் கிராமத்தில் உலா வருகிறார். ஜோதிடத்தால் அவரது உறவினர் தற்கொலை செய்துகொள்ள, ஜோதிடர்களைப் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த திரைப்படம் ஒன்றை சொந்தமாக தயாரிக்கும் முயற்சியில் இறங்குகிறார். அவருக்கு உள்ளூர் ஜோதிடர் பல தடைகளை உருவாக்குகிறார். அதைத் தாண்டி ராஜ்குமார் வெற்றி பெற்றாரா என்பது தான் படத்தின் ஒன்லைன் ஸ்டோரி.
இயக்குநர் ராஜ்குமாரே படத்திலும் கதாநாயகனாக நடித்துள்ளார். இயல்பான நடிப்பால் கதையோடு ஒன்றிப்போய்விட்டார் சங்ககிரி ராஜ்குமார். மற்றவர்களுக்கு அவர் நடிப்பு சொல்லிக்கொடுக்கும் காட்சியில் அவர் படும் சிரமங்கள் ரசிகர்களுக்கு நல்ல நகைச்சுவை விருந்து.
கிராமத்து நிஜக் கூலித்தொழிலாளர்களை வைத்து படத்தை உருவாக்கியுள்ள இயக்குநரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
சேரன், சத்யராஜ் ஆகியோர் பொருத்தமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். குப்புசாமி, வெள்ளையம்மாள், முத்தாயி, முத்துசாமி, எஸ்.எம்.மாணிக்கம், இந்திராணி, எஸ்.எம்.செந்தில்குமார், சிவா ரத்தினம், பெரியசாமி, மோகனப்பிரியா, தங்கராசு, தர்மசெல்வன், நமச்சிவாயம், ராஜேஷ் கிருஷ்ணன், ரஞ்சித், நிலா ஆகியோர் கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
படம் முழுக்க கிராமத்து மண் வாசனை கமழ்கிறது. ஒளிப்பதிவாளர் முரளி கணேஷின் கேமரா அந்த கிராமத்தில் நாமும் பயணிப்பது போன்ற உணர்வைத் தருகின்றது. தாஜ்நூரின் பின்னணி இசை அதற்கு பக்கபலமாக உள்ளது.
ஒரு சினிமாவை தயாரித்து வெளியிடுவது என்பது நெருப்புக் கயிற்றில் நடப்பது போன்றது என்பதை அழகாக சொல்லியிருக்கிறார்கள்.
பயோஸ்கோப் ரசிகர்களுக்கு சினிமாவை புரியவைக்கும் ஒரு அற்புதமான படைப்பு. இதுபோன்ற படங்களை நாம் கொண்டாட வேண்டும். தாராளமாக தியேட்டருக்கு சென்று ரசித்துப் பார்க்கலாம்.
– நிருபர் நாராயணன்