அரவிந்த் ராஜ் இயக்கத்தில் அமிதாஷ், சரத்குமார், காஷ்மீரா நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் “பரம்பொருள்”.
நீண்ட காலமாக தமிழகத்தில் நடைபெற்று வரும் சிலை கடத்தலை மையமாக கொண்டு இப்படம் வெளிவந்துளது.
வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுஷின் வில்லனாக நடித்த அமிதாஷ் இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
தங்கையின் மருத்துவ செலவுக்காக அமிதாஷ் சிறு சிறு திருட்டில் ஈடுபட, அவரை தனக்கு சாதகமாக செயல்பட வைக்கிறார் இன்ஸ்பெக்டர் சரத்குமார். ஆயிரம் ஆண்டு பழமையான சிலையை திருடி அதை 12 கோடி ரூபாய்க்கு விலை பேசுகிறார்கள். ஆனால், அதற்குள் சிலை சேதமடைந்துவிட, இருவரும் என்ன செய்வது என தெரியாமல் தவிக்கின்றனர்.
அமிதாஷுக்கு தங்கையின் மருத்துவ செலவுக்கு பணம் கிடைத்ததா? சரத்குமாரின் பணத்தின் மீதான இலக்கு நிறைவேறியதா? என்பது தான் படத்தின் மீதிக் கதை.
தற்போது நடக்கும் சிலை கடத்தல் குற்றங்கள் குறித்து இயக்குநர் இந்த படத்தின் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சொல்லி இருக்கிறார். பாராட்டுக்கள்.
அமிதாஷ் நடிப்பு அருமை. சோகமான காட்சிகளில் மட்டுமின்றி ஆக்ஷன் காட்சிகளிலும் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி் இருக்கிறார்.
அஜானுபாகுவான இன்ஸ்பெக்டர் வேடத்தில் மிக கச்சிதமாக நடித்திருக்கிறார் சரத்குமார். இந்த கதாபாத்திரத்தில் வேறு யாரையும் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. சண்டைக் காட்சிகளில் செம மாஸ் காட்டியிருக்கிறார்.
கதாநாயகி காஷ்மீரா கொடுத்த வேலையை செய்திருக்கிறார்.
யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை படத்திற்கு அழகு சேர்க்கிறது.
தொடக்கம் முதல் இறுதி வரை செம விறுவிறுப்பாக படம் நகர்கிறது. கிளைமாக்ஸ் காட்சியில் வரும் திருப்பம் யாரும் எதிர்பாராதது. இப்படத்தின் மூலம் முத்திரை பதித்திருக்கிறார் இயக்குநர் அரவிந்த்ராஜ்.
விறுவிறுப்புக்கு குறைவில்லாத பரம்பொருளின் அருளை அனைவரும் பெறலாம். தாராளமாக தியேட்டருக்கு சென்று ரசிக்கலாம்… தரிசிக்கலாம்….!
– நிருபர் நாராயணன்