ஜே 4 ஸ்டுடியோஸ் – ராஜ ரத்தினம் தயாரிப்பில், இயக்குநர் சுரேஷ் இயக்கத்தில் சின்னத்திரை நடிகர் புகழ் நடிப்பில் உருவாகியுள்ள படம் “மிஸ்டர் ஜூ கீப்பர்”. இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் நடிகர் சூரி பேசியதாவது: “காட்டுக்குள் படம் எடுப்பது எவ்வளவு கஷ்டம் என்று தெரியும். நானும் 3 வருடம் அதை அனுபவித்து இருக்கிறேன். காடும், காட்டு உயிரினமும்தான் இயற்கைக்கு பக்கத்தில் இருக்கிறது. ஊருக்குள் யானை, கரடி, சிங்கம், புலி எல்லாம் புகுந்ததாக சொல்கிறோம். ஆனால், அவைகள் அங்குதான் இருக்கிறது. நாம் தான் உள்ளே புகுந்துட்டோம் என்று நினைக்கிறேன். இது எல்லோருக்கும் சேர வேண்டிய கருத்து. எல்லோரும் பார்க்க வேண்டிய படம். படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்” என தெரிவித்தார்.
நடிகர் புகழ் பேசியதாவது: “ஒரிஜினல் புலி கூடதான் பண்ணிருக்கேன் என்று சொல்லும் அளவுக்கு இருந்தது. அவ்வளவு முறை பல இடங்களிலும் சொல்லியிருக்கேன். இதே பிரசாத் ஸ்டூடியோ அருகில் கார் கழுவிக் கொண்டு இருந்தேன். இன்றைக்கு பேனர் வைத்து, நீங்கள் பண்ண படம் என்று சொல்லும்போது ரொம்ப சந்தோஷமாக இருந்தது. யாராவது 10 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் திரும்பி எப்போ கொடுப்ப என்று கேட்பார்கள். ஆனால், என்னை நம்பி இவ்வளவு பணம் கொடுத்து படத்தை எடுத்ததற்கு தயாரிப்பாளருக்கு நன்றி.
இதுவரை நிறைய ஹீரோயின்கள்கிட்ட இன்ஸ்டாகிராமில் மெசேஜ் செய்திருப்பேன். எல்லாரும் கதையைக் கேட்டு, யார் ஹீரோ என கேட்பார்கள் நான்தான் என்றதும் வேண்டாம் என்று கூறி விடுவார்கள். ஆனால், இந்த ஹீரோயின் மட்டும்தான் கதை பிடித்திருக்கு என என்னுடன் நடிக்க ஒத்துக் கொண்டார்.
ஒரிஜினல் புலி கூட படம் பண்ணுவது உண்மையில் எங்களுக்குதான் பயமாக இருந்தது. ஹீரோயினும், நானும் 1 மணி நேரம் ஷூட்டில் பேசுவோம். அவங்க பேசுவது எனக்கு புரியாது. நான் பேசுவது அவங்களுக்கு புரியாது. யுவன் சங்கர் ராஜா இந்த படத்துக்கு மியூசிக் போடுவாரான்னு நினைத்தேன். ஆனால், போஸ்டரை பார்க்கும்போது சந்தோஷமாக இருந்தது. அவருக்கு எனது நன்றி. இந்த படத்தில் கொச்சைப்படுத்தும் வசனமோ, காட்சிகளோ எதுவும் கிடையாது. நாம் அன்பு காட்டினால் மிருகங்கள் கூட அன்பாக இருக்கும் என்பதையும் காட்டி உள்ளோம்.” என்று கூறினார்.