தமிழ் திரையுலகின் முன்னணி சினிமா செய்தித் தொடர்பாளரான நிகில் முருகன் முதல்முறையாக நடிகராக களமிறங்கியுள்ள திரைப்படம் “பவுடர்”. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை வடபழனியில் நடைபெற்றது.
இவ்விழாவில் நடிகர் நிகில் முருகன் பேசியதாவது:
எனது திரையுலக வெற்றிக்கு பக்கபலமாக உள்ள எனது தாய், தந்தை, மனைவி ஆகியோருக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். சினிமா துறையில் வாய்ப்பு வழங்கிய தயாரிப்பாளர்கள், நடிகர்கள், இயக்குநர்கள் ஆகியோருக்கு நெஞ்சார்ந்த நன்றி.
பல ஆண்டுகளாக திரையுலகிலேயே பயணித்தாலும் நடிப்பது இதுவே முதல்முறை. நல்ல கதையம்சம் உள்ள படத்துடன் நடிப்பிற்கு வந்துள்ளேன்.
“பவுடர்” படம் நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்.
இவ்வாறு நிகில் முருகன் பேசினார்.
ஒரு இரவில் நடக்கும் திரில் நிறைந்த சம்பவங்களே “பவுடர்” படத்தின் மையக்கரு. இதில் நேர்மையான போலீஸ் அதிகாரி வேடத்தில் நிகில் நடித்துள்ளார். படத்தின் இயக்குநர் விஜய் ஸ்ரீயும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் வித்யா பிரதீப், அனித்ரா நாயர் , மொட்டை ராஜேந்திரன், வையாபுரி, சிங்கம்புலி, ஆதவன், சாந்தினி தேவா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இதுவொரு த்ரில்லிங் ஆக்ஷன் மூவி என்பது குறிப்பிடத்தக்கது.
‘பவுடர்’ படத்தின் டிரெய்லர் வெளியாகி நெட்டிசன்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஆம், டிரெய்லர் வெளியான சிறிது நேரத்திலேயே சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.