உலகமே நாடக மேடை என்றார் ஷேக்ஸ்பியர். அந்தவகையில், பவுடர் போட்டு தங்கள சுயரூபத்தை மறைத்து வெளியில் நடிக்கும் சில மனிதர்களின் உண்மை முகத்தை அப்பட்டமாக அம்பலப்படுத்துகிறது “பவுடர்” திரைப்படம்.
ஒரு இரவில் நடக்கும் திரில் நிறைந்த சம்பவங்களே “பவுடர்” படத்தின் மையக்கரு.
தமிழ் திரையுலகின் முன்னணி சினிமா செய்தித் தொடர்பாளரான நிகில் முருகன் முதல்முறையாக கதாநாயகனாக நடித்துள்ளார். ராகவன் என்னும் நேர்மையான போலீஸ் அதிகாரி வேடத்தில் வருகிறார். காக்கிச்சட்டை அவருக்கு கச்சிதமாக பொருந்துகிறது. கம்பீரக் குரலும் அவருக்கு பெரிய பிளஸ். முதல் பந்திலேயே சிக்ஸர் அடிப்பதை போல விளாசியிருக்கிறார் நிகில் என்றே கூறலாம். அதற்கேற்றார் போல், படமும் டி-20 கிரிக்கெட் போட்டிக்கு நிகரான வேகத்தில் நகர்கிறது.
கதாநாயகி வித்யா பிரதீப் அழகான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இதுபோல், வையாபுரி, சாந்தினி உள்ளிட்டோரும் தங்கள் பங்களிப்பை எந்த குறையுமின்றி வழங்கியுள்ளனர்.
முழு படமும் ஒரு இரவிலேயே நடப்பதால், ராஜா பாண்டியின் கேமரா கோணங்களில் நாமும் அப்படியே கேமராவுடன் பயணிப்பது போன்ற உணர்வு தொற்றிக்கொள்கிறது.
படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை மூலம், “இசையமைப்பாளர் யார்?” என ரசிகர்களை கேட்க வைத்திருக்கிறார் லியாண்டர் லீ மார்ட்டி. “சாயம் போன வெண்ணிலவே…”, “நோ சூடு நோ சொரணை” ஆகிய பாடல்கள் அருமை.
படத்தில் 6 சம்பவங்களை, திரைக்கதை என்னும் ஒரே கயிற்றில் ஒன்றாக கட்டி இழுத்து, ஒரு பெரும் த்ரில்லர் படத்தை நிலை நிறுத்தியிருக்கிறார் இயக்குநர் விஜய்ஸ்ரீ.
மொத்தத்தில் ரசிகர்களின் முகத்தில் மட்டுமல்ல நெஞ்சிலும் திகில் பூசும் படம் தான் “பவுடர்”. தாராளமாக தியேட்டருக்கு சென்று பார்க்கலாம்.
– நிருபர் நாராயணன்