பிரசாந்த் நடித்திருக்கும் “அந்தகன்” திரைப்படத்தின் அறிமுகப் பாடலை நடிகர் விஜய் வெளியிட்டார். இதுதொடர்பான வீடியோ படத்தின் அறிமுக விழாவில் ஒளிபரப்பப்பட்டது. இவ்விழாவில், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், நடிகைகள் ஊர்வசி, பிரியா ஆனந்த், வனிதா விஜயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்வில் நடிகர் தியாகராஜன் பேசுகையில், கடந்த 2019-ம் ஆண்டு பலத்த போட்டிகளுக்கு நடுவே இந்தியில் வெளியான “அந்தாதூன்” படத்தின் தமிழ் உரிமையை வாங்கியதாகவும், பிரசாந்த் பியானோ மீது காதல் கொண்டவர் என்பதால், அவரை கதாநாயகனாக்கி இப்படத்தை இயக்கி இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
டாப் ஸ்டார் நடிகர் பிரசாந்த் பேசுகையில், “அந்தகன் ஆந்தம் பாடலை வெளியிட்ட விஜய்க்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். போனில் தகவலை கூறியதும் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டு, இதற்காக நேரம் ஒதுக்கினார்.
இந்தப் பாடலை உருவாக்கிய பிரபு தேவாவிற்கும், நடனம் அமைத்த சாண்டி மாஸ்டர், இசையமைப்பாளர் அனிருத்திற்கும் மிக்க நன்றி.
ஒளிப்பதிவாளர் ரவி யாதவ் ஒவ்வொரு காட்சியையும், தனது கேமராவில் பிரம்மாண்டமாகவும், நேர்த்தியாகவும் செதுக்கி இருக்கிறார். அவருக்கு எனது அன்பான நன்றி.
என் மீது மாறாத அன்பும், பாசமும் காட்டும் ரசிகர்களுக்கு என்றென்றும் நெஞ்சார்ந்த நன்றிகள்.”
நடிகை பிரியா ஆனந்த் பேசுகையில், இந்தப் படத்தில் பணியாற்றியது மூலம், தாய் வீட்டிற்கு வந்த மகிழ்ச்சி கிடைத்திருக்கிறது என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.
இப்படத்தை பிரசாந்தின் தந்தையும் மலையூர் மம்பட்டியான் புகழ் கதாநாயகனுமான தியாகராஜன் இயக்கியுள்ளார். ஒளிப்பதிவாளர் ரவி யாதவ் கேமராவை கையாண்டுள்ளார். பார்வையற்ற மாற்றுத்திறனாளி பியானோ இசைக் கலைஞன் பற்றிய இப்படம் ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று வெளியாகிறது.
– நிருபர் நாராயணன்