சட்டப் படிப்பை முடிக்காமல் எதற்கெடுத்தாலும் “லா பாயின்ட்” பேசி பிரச்னைகளை உருவாக்கும் ஜெயம் ரவியை, ஊட்டியில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார் சகோதரி பூமிகா. ஆனால், அவரது குடும்பமும் நமது கதாநாயகனால் பிரிந்து விடுகிறது. கடைசியில் தன்னைப் பற்றிய உண்மை தெரியவர, பிரிந்த குடும்பத்தை மீண்டும் ஒன்றுசேர்க்க முயற்சி செய்கிறார் பவர் கார்த்தியாக வரும் ஜெயம் ரவி. இதில் அவர் வென்றாரா என்பது தான் படத்தின் மீதிக்கதை.
கார்த்தி கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார். “லா” பாயின்டுகளை அள்ளிவிட்டு அலப்பறை பண்ணுகிறார். சட்டக்கல்லூரி மாணவருக்கு கல்லூரி பேராசிரியரே தேர்வு எழுதுவதை செல்போனில் படம் பிடித்து மீடியாவுக்கு அனுப்புவேன் என மிரட்டும் காட்சி செம கலாட்டா. உருக்கமான நடிப்பிலும் கிளாப்ஸ் அள்ளுகிறார் ஜெயம் ரவி.
இப்படத்தில் பிரியங்கா மோகன் இருக்கிறாரா என தேடும் அளவுக்கு தான் அவருக்கு காட்சிகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனாலும், காதல், காமெடி, சென்டிமெண்ட் என்று அசத்தலாக நடித்துள்ளார்.
அக்கா கதாபாத்திரத்தில் அழகாக பொருந்துகிறார் பூமிகா. விடிவி கணேஷின் நகைச்சுவை நம் வயிற்றை பதம் பார்க்கிறது. சரண்யா பொன்வண்ணன், சீதா, சதீஷ் கிருஷ்ணன் உள்ளிட்டோரும் கச்சிதமாக நடித்திருக்கிறார்கள்.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ‘மக்காமிஷி’ பாடல் ரசிக்க வைக்கிறது. விவேகானந்த் சந்தோஷம் ஊட்டியின் அழகை அப்படியே படம்பிடித்துக் காட்டியிருக்கிறார்.
பின்விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல் பேசினால், குடும்ப அமைப்புக்குள் எத்தகைய சிக்கல்கள் எழும் என்பதை இயல்பாகக் காட்சிப்படுத்த முயன்றுள்ளார் இயக்குநர் எம்.ராஜேஷ். மிகச்சிறந்த குடும்பக் கதையை தேர்வு செய்து மிகவும் சுவாரஸ்யமாக படைத்திருக்கிறார்.
மொத்தத்தில் பிரதர் இனிமையானவன்.
– நிருபர் நாராயணன்