விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக வெளிவந்துள்ள படம் பீஸ்ட்.
ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூரில் இருந்து படம் தொடங்குகிறது. படத்தின் டைட்டிலை போட்டு படத்தை ஆரம்பிக்கும் இடத்திலேயே இயக்குநர் நெல்சன் கைதட்டல்களை அள்ளுகிறார்.
ரா உளவுத்துறை அதிகாரியாக பணியாற்றிய விஜய் சூழ்நிலையால் வேலையை விட்டு விட்டு செக்யூரிட்டி நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். தான் பணியாற்றும் நிறுவனம் சார்பில் விஜய் ஒரு வணிக வளாகத்திற்கு பணியாற்றச் செல்லும் போது, அங்கு தீவிரவாதிகள் பொதுமக்களை பணைய கைதிகளாக பிடிக்கிறார்கள். தீவிரவாதி உமர் பரூக் என்பவரை விடுவிக்க கோரிக்கை வைக்கிறார்கள்.
இதையடுத்து விஜயின் உதவியை அதிகாரிகள் நாடுகிறார்கள். முடிவில், விஜய், மாலுக்குள் இருக்கும் தீவிரவாதிகளை அழித்து பொதுமக்களை எப்படி காப்பாற்றினார்? என்பதே பீஸ்ட் படத்தின் மீதிக்கதை.
படத்தில் வீரராகவன் என்னும் கதாபாத்திரத்தில் செம அசத்தலாக நடித்திருக்கிறார் விஜய். சண்டைக் காட்சிகளில் மாஸ் காட்டியிருக்கிறார்.
கதாநாயகி பூஜா ஹெக்டே அழகுப் பதுமை. நடனத்திலும் ஸ்டைல் தான். படத்தில் தனக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார் பூஜா. இவர் இனி கோலிவுட்டில் ஒரு பெரிய ரவுண்ட் வருவார் என எதிர்பார்க்கலாம்.
அல்தாஃப் உசைன் என்னும் கதாபாத்திரத்தில் இயக்குநர் செல்வராகவன் ஆர்ப்பாட்டம் இல்லாமல் அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நகைச்சுவை காட்சிகளுக்கு விடிவி கணேஷ் பலம் சேர்த்திருக்கிறார்.
மனோஜ் பரமஹம்சாவின் நுணுக்கமான ஒளிப்பதிவு மிரட்டுகிறது. பாடல் காட்சிகளில் இவரது கேமரா கவிதை பேசுகிறது…
அனிருத் இசையில் நடிகர் சிவகார்த்திகேயன் எழுதிய அரபிக் குத்து உட்பட பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்.
மொத்தத்தில் ‘பீஸ்ட்’ விஜய் ரசிகர்களுக்கு ராஜ விருந்து.
– நிருபர் ஆர்.நாராயணன்