ஸ்டிரீட் லைட் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை ஜோ ஜியோவானி சிங் இயக்கியுள்ளார்.
சிங்கப்பூரில் ஒரு டிராவல் ஏஜென்சியில் வேலை செய்கிறார் கதாநாயகி. அவரது நிறுவனத்தின் இலவச விமான டிக்கெட் மூலம் சென்னை வருகிறார். வந்த இடத்தில் தனது நண்பரை சந்திக்கிறார். இவரை பின்தொடரும் மர்ம நபர், சிங்கப்பூர் வரை சென்று கதாநாயகியை நேரில் சந்திக்கிறார். இந்நிலையில் உடல் உறுப்பு திருட்டு சம்பவங்களும் அரங்கேறுகிறது.
இதனிடையே தனது தந்தைக்கு வேலை இழந்த நிலையில், வறுமையால் சகோதரருடன் சேர்ந்து ஆளுக்கொரு வீட்டில் கொள்ளை அடிக்கச் செல்கிறார் கதாநாயகி. இதில் அவர்கள் சிக்கினார்களா அல்லது தப்பித்தார்களா?. உடல் உறுப்பு திருட்டின் மர்மங்கள் எப்படி அம்பலமாகிறது ஆகியவை தான் படத்தின் மீதிக் கதை.
இப்படத்தின் அறிமுக இயக்குநர் ஜோ ஜியோவானி சிங், படத்தின் கதாநாயகனாக தனது நடிப்பையும் வழங்கி ஒரே நேரத்தில் இரு படகில் பயணம் செய்யும் சாகசத்தை புரிந்துள்ளார்.
விஜய் டிவி புகழ் ரியோ, தம்பிதுரை என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நடித்துள்ள அனைவரும் மிகச்சிறப்பான பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
பிரவீன் விஸ்வ மாலிக்கின் இசையும் சலீம் பிலால் ஜிதேஷின் ஒளிப்பதிவும் படத்திற்கு உறுதுணையாக உள்ளன.
மூளைச்சாவு அடைந்துவிட்டதாக கூறி உயிர் பிரியும் முன்பே, உடல் உறுப்புகளை அகற்றும் கொடுமை மருத்துவத்துறையில் சர்வ சாதாரணமாக அரங்கேறி வருகிறது. இத்தகைய சூழலில், உடல் உறுப்பு திருட்டு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் படமாக இது அமைந்துள்ளது என்றே கூறலாம். இந்த ஒற்றைக் கோட்டிலேயே படம் பயணித்திருந்தால் த்ரில்லிங்காக இருந்திருக்கும்.
கதாநாயகியின் கொள்ளை முயற்சிகளும் அதற்கான காரணங்களும் படத்தில் எடுபடவில்லை. இது திடீர் சொருகல் போல் தெரிகிறது.
ஒரு குறும்படத்தை பெரும் படத்தை போல் எடுத்திருக்கும் உணர்வை ஒருசில காட்சிகள் தருகின்றன. இதை தவிர்த்திருக்கலாம். திரைக்கதை நகர்வில் இன்னும் சற்று கவனம் செலுத்தியிருக்க வேண்டும்.
புரோக்கன் ஸ்கிரிப்ட் – படத்தின் தலைப்புக்கேற்ப திரைக்கதையும் பல இடங்களில் உடைந்து போயிருக்கின்றன. ஆனாலும், இதுபோன்ற குறைந்த பட்ஜெட் திரைப்படங்களை ஆதரிக்கும் வகையில் ரசிகர்கள் தியேட்டருக்கு சென்று கண்டு ரசிக்கலாம்.
– நிருபர் நாராயணன்