தமிழ்நாட்டில் தபால் துறை பணிகளுக்கு ஏராளமானோர், போலி சான்றிதழ்களை கொடுத்து பணிக்கு சேர்ந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து இது தொடர்பாக விசாரணை நடத்தி தகவல் அளிக்க பள்ளிக்கல்வித் துறையை தபால் துறை கேட்டுக் கொண்டுள்ளதாக “ஊர்குருவி” தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடு முழுவதும் தபால் துறையில் கிராம அஞ்சலக பணிக்கு உள்ளூர் மொழி தெரிந்தவர்கள் மட்டுமே நியமிக்கப்படுகின்றனர். அந்தவகையில் தமிழ்நாட்டில் தமிழ் படித்தவர்கள் மற்றும் தமிழ் தெரிந்தவர்கள் மட்டுமே பணியில் சேர்க்கப்படுகின்றனர். அதன்படி தமிழ்நாட்டில் பணியாற்ற தேர்வு செய்யப்பட்ட 1,500-க்கும் மேற்பட்டோர், தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அளித்த பள்ளிப் படிப்பிற்கான சான்றிதழ்களை கொடுத்துள்ளனர். இதில் பலரது சான்றிதழ் மீது தபால் துறை பணியாளர் தேர்வு பிரிவு அதிகாரிகளுக்கு பெரும் சந்தேகம் ஏற்பட்டது.
நமது தமிழ் சினிமாவில் மதிப்பெண்ணை திருத்தும் பள்ளி மாணவன், ஆர்வக் கோளாறில் தன் இஷ்டத்திற்கு 100 மதிப்பெண்ணுக்கு மேல் அறியாமல் போட்டுக் கொள்வதை பல படங்களில் பார்த்திருப்பீர்கள்… அது போல், இந்த சான்றிதழில் சென்னை செகண்டரி பப்ளிக் ஸ்கூல், சென்னை சீனியர் ஸ்கூல் என தமிழ்நாட்டிலேயே இல்லாத பள்ளிகளின் பெயர்கள் குறிப்பட்டு்ள்ளது. மேலும், முதல் மொழி ஹிந்தி என்று குறிப்பிடப்பட்டுள்ளதுடன், பல மாணவர்கள் கையெழுத்தையும் ஹிந்தியிலேயே போட்டுள்ளனர்.
அதைவிட ஒருபடி மேலே போய்… தமிழ்நாடு அரசின் முத்திரையுடன் State Government Board of Tamilnadu, State Board of Examinations, Board of Higher Secondary Examinations என தங்கள் கற்பனைக்கு ஏற்றவாறு அதை தயாரித்துக் கொடுத்தவர்கள் அச்சிட்டு கொடுத்துள்ளனர்.
இத்தகைய பெயர்களில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சான்றிதழை வழங்குவது இல்லை என்பது கூட… பாவம்… அந்த போலி சான்றிதழ் தயாரிப்பு கும்பலுக்கு தெரியவில்லை. தபால் துறை வேலைக்காக அதை சமர்ப்பித்தவர்களுக்கும் இது தெரியவில்லை… இதுவே அவர்களை வசமாக சிக்க வைத்தது… (அடடா… ரொம்ப பாவம்… ஏமாந்துட்டாங்கய்யா…!)
மேலும், தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமாக www.tamilnadustateboard.org என்ற போலியான இணையதளப் பெயரையும் குறிப்பிட்டுள்ளனர்.
இத்தகைய குளறுபடிகளால் போலி சான்றிதழ் சமர்ப்பித்தவர்களை தபால்துறை அதிகாரிகள் எளிதாக கண்டுபிடித்துவிட்டனர். எனினும் அதிகாரப்பூர்வ நடவடிக்கைக்காக இந்த சான்றிதழ்களின் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்து அறிக்கை தருமாறு, தபால் துறை சார்பில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறைக்கு கோரிக்கை கடிதம் எழுதப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இவ்வாறு போலி 10-ம் வகுப்பு சான்றிதழ்களை கொடுத்து, தபால் துறையில் நுாற்றுக்கணக்கானோர் பணியில் சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அவர்கள் அனைவர் மீதும் விரைவில் பணிநீக்க நடவடிக்கை பாய உள்ளது.
ஏற்கனவே, தமிழே தெரியாதவர்கள் தமிழ் தேர்வில் தேர்ச்சி பெற்றதாக கூறி, ரயில்வே துறையில் ஏராளமானோர் பணிக்கு சேர்ந்தது சில வருடங்களுக்கு முன்பு அம்பலமானது. தற்போது, தபால் துறையில் போலி சான்றிதழ் கொடுத்து பலர் பணிக்கு சேர்ந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தகவலை நமது தலைமை நிருபரிடம் கூறிவிட்டு இந்த கோடை காலத்தில் தண்ணீர் தேடி பறந்தது ஊர்குருவி.