இன்று உலக சிட்டுக்குருவிகள் தினம். இந்த சின்னஞ்சிறு பறவையினத்தை பாதுகாக்க வேண்டும் என்கிற நோக்கத்தில், கடந்த 2010-ம் ஆண்டு மார்ச் 20-ம் தேதி உலக சிட்டுக்குருவி தினமாக ஐ.நா. அறிவித்தது.
சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை விவசாய நாடான இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதுமே குறைந்து வருகிறது.
சிட்டுக்குருவிகள் வீடுகளில் கூடு கட்டினால் அதிர்ஷ்டம் வரும் என்பது இன்னும் கிராமத்து மக்களின் நம்பிக்கையாக உள்ளது. வயல்வெளி, வனப்பகுதிகளில் வாழ்வதை விட மனிதர்களுடன் நெருங்கி பழக விரும்பும் பறவையாக சிட்டுக்குருவி உள்ளது.
ஊர்குருவி என்று செல்லமாக அழைக்கப்படும் சிட்டுக்குருவிகள் வீடுகளுக்கு அருகில் உள்ள மரங்கள், வீட்டு மாடம், பரண், ஓடுகளின் இடைவெளி போன்ற இடங்களில் கூடுகட்டி வசித்து வந்தன. இப்போது கான்கிரீட் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் அதிகரிப்பால் இன்று நகரங்களில் இருந்து விடைபெறத் தொடங்கிவிட்டன.
சிட்டுக்குருவியின் மொத்த வாழ்நாள் 13 ஆண்டுகள் ஆகும். செல்போன் கோபுரங்களால் சிட்டுக்குருவி இனம் அழிந்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டது. ஆனால், அது உண்மை இல்லை என்கிறார்கள் விஞ்ஞானிகள். வீடுகளில் கம்பு, கேழ்வரகு, சோளம், திணை, சாமை போன்ற சிறுதானியங்களின் பயன்பாடு குறைந்துவிட்டதும், நெல் பயிரிடுதலில் பூச்சிக்கொல்லி மருந்துகளின் ஆதிக்கம் அதிகரித்துவிட்டதும் சிட்டுக்குருவிகளின் ஆயுளை குறைத்துவிட்டதாக கூறப்படுகிறது.
குருவிகளில் தேன் சிட்டு, தூக்கணாங்குருவி, பாக்குச் சிட்டு, வாலாட்டிச் சிட்டு, வானம்பாடி, அடைக்கலாங் குருவி, மொட்டைவால் குருவி என பல வகை உண்டு. அவற்றில் சிட்டுக்குருவி மட்டுமே மனிதனோடு நெருங்கி வாழக்கூடிய செல்லப் பறவையாகும். இந்த பூமியில் சிட்டுக்குருவிகள் 10,000 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்வதாக வரலாற்றுக் குறிப்புகள் சொல்கின்றன.
சிட்டுக்குருவிகள் பெரும்பாலும் இளவேனிற் காலத்தில்தான் கூடுகட்ட தொடங்கும்.
நமது வீட்டு முற்றம், மொட்டை மாடிகளில் மரப் பலகையால் ஆன செயற்கை கூட்டை வாங்கி வைத்தால் போதும். அவை தேடி வந்து கூடு கட்டும் வாய்ப்பு உள்ளது. கூடுக்கு அருகில் அவ்வப்போது கம்பு, அரிசி, கோதுமை, திணை போன்ற தானியங்களை வைக்கலாம். இந்த கோடைக் காலத்தில் அகன்ற மண் பாத்திரத்தில் தண்ணீரும் வையுங்கள்.
இந்த பூமியில் பல ஆயிரம் ஆண்டுகள் மனித இனத்தோடு வாழ்ந்த சிட்டுக்குருவிகளை அழிவின் விளிம்பில் இருந்து பாதுகாத்து, நம்முடன் என்றென்றும் வாழச் செய்வோம்.
கீச்… கீச்… கீச்…! உங்கள் வீட்டு மொட்டை மாடியில் சிட்டுக்குருவிகள் வந்துவிட்ட குரல் கேட்கிறது. போய் பாருங்கள்…!
– நிருபர் நாராயணன்