ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் பாரம்பரியமாக நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டி தமிழர்களின் வீரத்திற்கும் கலாச்சாரத்திற்கும் மிகச்சிறந்த அடையாளமாக கருதப்படுகிறது.
ஆதிகாலத்தில் மனிதர்கள் ஆநிரைகளை வைத்தே தனது வாழ்வாதாரத்தை மேம்படுத்தியுள்ளான். ஆநிரை கூட்டத்தை கவர்ந்து செல்வதும், அவற்றை மீட்டவர்களுக்கு சிலை வைப்பதும் பழங்காலத் தமிழர் வழக்கமாக இருந்துள்ளதை கல்வெட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. காலப்போக்கில் மாடுகளோடு விளையாடத் தொடங்கிய மனித குலம், அதை வீரவரலாறாக பறைசாற்றியது.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் உலகப் புகழ்பெற்றவை. தமிழகத்தில் தென் மாவட்டங்களில் சின்னஞ்சிறு கிராமங்களிலும் பொங்கல் திருநாள் மற்றும் உள்ளூர் கோயில் திருவிழாக்களையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுகின்றன.
ஜல்லிக்கட்டு காளைகளை யாதவ மக்கள் மற்றும் பிற சமூகத்தினரும் ஆர்வத்துடன் வளர்த்து வருகின்றனர். ஜல்லிக்கட்டுக்காக காளைகளை தயார் செய்வது ஒருபுறம் என்றால், மறுபுறம் மாடுபிடி வீரர்கள் தங்கள் வீரத்தை காட்ட மிக கடினமான உழைப்பை மேற்கொள்கின்றனர். இதற்காக காளைகளுடன் பயிற்சி, சத்தான உணவு மற்றும் உடற்பயிற்சி என ஆண்டு முழுவதும் இளைஞர்கள் தங்களை வாடிவாசல் விளையாட்டுக்கு தயார்படுத்துகின்றனர்.
மத்திய, மாநில அரசுகள் கேரம் போர்டு, ரக்பி போன்ற உப்புசப்பில்லாத விளையாட்டுக்கெல்லாம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு தருகிறது. ஆனால், வீரம் நிறைந்த ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு இத்தனை காலம் அரசு வேலை என்ற சலுகை வழங்காமல் இருப்பது ஏன்? என்று மாடுபிடி வீரர்கள் எழுப்பும் குரல் நியாயமானது தானே…!
இந்தாண்டு பாலமேடு ஜல்லிக்கட்டில் சிறந்த வீரராக தேர்வான பிரபாகரன், தனக்கு ஆடம்பர கார் பரிசு வேண்டாம், அரசு வேலை வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், மற்ற விளையாட்டுகளில் வெற்றி பெற்றால், அரசு வேலை தேடி சென்று கொடுக்கப்படுகிறது. அந்த சலுகை மாடுபிடி வீரர்களுக்கு மட்டும் கிடையாதா…? என்று ஏக்கத்துடன் கேட்கிறார்.
இந்நிலையில், ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை போன்று ஜல்லிக்கட்டு லீக் போட்டியை நடத்த தமிழக அரசு பரிசீலித்து வருவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு மாதம் 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும், என திமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்ததை உடனடியாக செயல்படுத்த வேண்டும், என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
ஜல்லிக்கட்டு என்னும் தமிழர்களின் வீரவிளையாட்டு அழியாமல் பாதுகாக்க, மாடுபிடி வீரர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என்பதே மக்களின் ஒருமித்த கருத்தாக உள்ளது.
– நிருபர் நாராயணன்