பிரபல சின்னத்திரை நடிகை திவ்யா ஸ்ரீதர் தனது கணவர் அர்னவ் அடித்து துன்புறுத்துவதாக சென்னை திருவேற்காடு காவல் நிலையத்தில் அளித்துள்ள புகார், சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு போட்டியாக நடிகர் அர்னவ் ஆவடி காவல் ஆணையரகத்தில் தனது மனைவி மீது புகார் அளித்துள்ளார்.
கர்ப்பிணியாக உள்ள தன்னை கணவர் வயிற்றில் எட்டி உதைத்துவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளார் நடிகை திவ்யா. மேலும், கொரோனா காலத்தில் 2 ஆண்டுகளாக கணவர் வேலையில்லாமல் இருந்ததாகவும், இதனால் வீட்டுக்கடனுக்கு மாதம் 40,000 ரூபாய் தானே செலுத்தி வந்ததாகவும், அர்னவ் கைச்செலவுக்கு கூட பணம் கொடுத்து வந்ததாகவும் கூறியுள்ளார் திவ்யா.
அர்னவ் பெயரில் வீடு வாங்கியுள்ளதாகவும் 25 ஆண்டு கால வீட்டுக் கடனில், இன்னும் 23 ஆண்டுகள் திருப்பிச் செலுத்த வேண்டிய நிலையில் இருப்பதாகவும், நடிகை திவ்யா வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
மேலும், பல பெண்களுடன் அர்னவ் நெருங்கி பழகி அவர்களிடம் மோசடி செய்வதாகவும் திடுக்கிடும் குற்றச்சாட்டையும் திவ்யா முன்வைத்துள்ளார்.
ஆனால், சக நடிகரான ஈஸ்வர் என்பவரின் தூண்டுதலின் பேரில் தனது மனைவி இவ்வாறு புகார் அளித்திருப்பதாக கூறியுள்ளார் நடிகர் அர்னவ்.