மனோஜ் பாரதிராஜா இயக்கத்தில், இசைஞானி இளையராஜா இசையில் வெளிவந்துள்ள கவித்துவமான திரைப்படம் “மார்கழி திங்கள்”.
“என் இனிய தமிழ் மக்களே, என்னைப் போலவே எனது மகனையும் இயக்குநராக ஏற்றுக்கொள்ளுங்கள்” என்ற கம்பீரக் குரலில் பாரதிராஜாவின் டிரேட்மார்க் அறிமுக வரிகளுடன் படம் தொடங்குகிறது.
கதை, திரைக்கதை, வசனத்துடன் படத்தையும் தயாரித்துள்ளார் சுசீந்திரன். இயக்குநர் பொறுப்பை மனோஜ் பாரதிராஜாவிடம் கொடுத்திருக்கிறார். அவரது நம்பிக்கையை வீணாக்காமல் முதல் படத்திலேயே இயக்குநராக சிக்ஸர் அடித்திருக்கிறார் ராஜா வீட்டு கன்றுக்குட்டி…!
திண்டுக்கல் அருகே ஒரு கிராமத்தில், பள்ளியில் ஒரே வகுப்பில் படிக்கும் கவிதாவுக்கும், வினோத்துக்கும் காதல் மலர்கிறது. ஆனால், கல்லூரி படிப்பு முடித்த பின்பு தான் கல்யாணம், அதுவரை காதலர்கள் பேசக்கூடாது என்று நிபந்தனை விதிக்கிறார் கவிதாவின் தாத்தா பாரதிராஜா.
இத்தகைய சூழலில் காதலர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளும், அவற்றை அவர்கள் எப்படி சமாளிக்கிறார்கள் என்பதும் தான் படத்தின் மீதிக்கதை.
இன்றைய காலத்தில் சாதியின் பெருமையை காட்டும் ஒரு ஃபேஷனாக மாறிவிட்ட ஆணவப் படுகொலைகளை சுட்டிக்காட்டி படத்தை தந்திருக்கிறார்கள். சுமார் 2 மணி நேரப் படத்தில் எதிர்பாராத திருப்பங்களும் உள்ளன.
கதாநாயகன் ஷ்யாம் செல்வன், தனக்கு முதல் படம் என்றாலும் குறை சொல்ல முடியாத நடிப்பை தந்திருக்கிறார். கதாநாயகி ரக்சனா காதல் காட்சிகளில் செம மாஸ்.
இயக்குநர் பாரதிராஜாவும் தாத்தா வேடத்தில் நடித்து அசத்தியுள்ளார்.
“மார்கழி திங்கள்” என்னும் அழகான டைட்டில் கொண்ட இப்படத்தை இளையராஜா தனது இசை தூரிகையால் காதல் காவியமாக்கி இருக்கிறார். பின்னணி இசையிலும் தனித்தன்மையை காட்டியிருக்கிறார்.
கிராமிய மணம் வீசும் இதுபோன்ற திரைப்படங்கள் இன்னும் நிறைய வரவேண்டும். அதற்கு மனோஜ் பாரதிராஜா தனது தந்தை பாணியில் புதிய களம் அமைத்திருக்கிறார் என்றே கூறலாம்.
மொத்தத்தில்… மார்கழி குளிர் நெருங்கும் வேளையில், காதல் குளிரில் ரசிகர்களை சிலிர்க்க வைத்துள்ளது “மார்கழி திங்கள்”.
– நிருபர் நாராயணன்