பிரதமர் மோடி சமீபத்தில் நம் நாட்டின் யூனியன் பிரதேசமான அழகு ததும்பும் லட்சத்தீவுக்கு பயணம் மேற்கொண்டார். அங்கு நடைப்பயிற்சி மற்றும் ஸ்கூபா டைவிங் மேற்கொண்ட பிரதமர் அதுதொடர்பான புகைப்படங்களை டுவிட்டர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருந்தார். மேலும், “அழகும் அமைதியும் தவழும் லட்சத்தீவு மனதை மயக்கும் இடமாக விளங்குகிறது. சாகசத்தை விரும்புவர்களின் பயணப் பட்டியலில் லட்சத்தீவு இடம்பெற வேண்டும்” என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், சுற்றுலாவை மட்டுமே நம்பியிருக்கும் குட்டி நாடான மாலத்தீவுக்கு போட்டியாக லட்சத்தீவு சுற்றுலாவை பிரதமர் மோடி ஊக்குவிப்பதாக கருத்து பரவியது. இதையடுத்து, இந்தியாவையும் பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்து அந்நாட்டு அமைச்சர்கள் மரியம் ஷியுனா, அப்துல்லா மஹ்சூம் மஜித், மால்ஷா ஷெரீப் ஆகிய மூவரும் சர்ச்சை கருத்துகளை வெளியிட்டனர். மரியம் ஷியுனா பிரதமர் மோடியை மிகவும் மரியாதை குறைவாக விமர்சித்திருந்தார்.
மாலத்தீவு ஆளுங்கட்சி மூத்த தலைவரான ஜாகித் ரமீஸ், “சுற்றுலாத்துறையில் எங்களுடன் போட்டியிட முடியுமா?, இந்தியர்களால் சுத்தத்தை பேண முடியுமா?, சுற்றுலா தலங்களில் உள்ள தங்கும் அறைகளின் துர்நாற்றமே, இந்திய சுற்றுலாத்துறையை படுபாதாளத்துக்கு தள்ளிவிடும்” என்று மிகவும் கேலியாக விமர்சித்திருந்தார்.
இதனால், கொந்தளித்துப் போன நமது அரசியல், சினிமா, கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் மாலத்தீவு அமைச்சர்களின் கருத்துகளுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்தனர். மேலும், பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் தங்களது மாலத்தீவு சுற்றுலா பயணத்திற்கான விமான மற்றும் ஓட்டல் முன்பதிவை ரத்து செய்யத் தொடங்கினர்.
இதனால், பீதியடைந்த மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, சர்ச்சை கருத்து தெரிவித்த 3 அமைச்சர்களையும் சஸ்பெண்ட் செய்வதாக அறிவித்தார். எனினும், சீன ஆதரவாளரான முகமது முய்சுவின் நடவடிக்கை வெறும் கண்துடைப்பு என்றே கூறப்படுகிறது.
மாலத்தீவின் பாதுகாப்பு, கடல் வளம், கல்வி, சுற்றுலா என அனைத்திலும் இந்தியாவின் பங்களிப்பு மிகப்பெரியதாகும். ஆனால், தற்போது சீனாவுடன் நெருக்கத்தை அதிகரித்து இந்தியாவுக்கு எதிரான வேலைகளில் முனைப்பு காட்டுகிறது மாலத்தீவு.
பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை ஐபிஎஸ் கூறுவது போல், மாலத்தீவின் பாதுகாப்பு ஆலோசகராக இந்தியாவை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி நியமிக்கப்படுவதே வழக்கம். மேலும், அங்கு இந்திய ராணுவத்தின் குழு எப்போதும் இருக்கும். இவற்றை தற்போது வாபஸ் பெற கோருகிறார் புதிய அதிபர்.
பிரதமர் மோடியின் தலைமையில் உலகின் மிகவும் சக்திவாய்ந்த நாடுகளில் ஒன்றாக உருவெடுத்துள்ள இந்தியாவுடன், பூமிவெப்பமயமாதல் பிரச்சனையில் கடலில் மெல்ல மெல்ல மூழ்கிக் கொண்டிருக்கும் ஒரு குட்டி நாடு மோதுவது பெரும் நகைப்பை தருவதாக உள்ளது. இதன் பின்னணியில் அடக்குமுறை சித்தாந்தத்தை கையாளும் சீனா இருப்பதால், வழக்கம் போல் இங்குள்ள கம்யூனிஸ்ட் மேதாவிகள் பிரதமர் மோடியை விமர்சித்து வருகின்றனர்.
அனைத்து வளங்களும் கொண்ட நம் நாட்டில், கிரிக்கெட் வீரர் டோனி குறிப்பிட்டது போல, நாம் காண வேண்டிய அழகான சுற்றுலா தலங்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. இவற்றையெல்லாம் ஒவ்வொன்றாக கண்டு ரசிக்கவே நமது ஆயுள்காலம் போதாது என்பதே உண்மை.
எதற்கெடுத்தாலம் வெளிநாட்டை உயர்த்திப் பேசி, பீற்றிக் கொள்ளும் பழக்கத்தை முதலில் இந்தியர்கள் கைவிட வேண்டும்.
மாலத்தீவும் வேண்டாம், மண்ணாங்கட்டியும் வேண்டாம். லட்சத்தீவை கொண்டாடுவோம்.
ஜெய்ஹிந்த்!
– நிருபர் நாராயணன்