உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு ஆண்டு முழுவதும் பக்தர்கள் வந்து கொண்டே இருப்பார்கள். குறிஞ்சி நில வேந்தரான தமிழ்க் கடவுள் இங்கே புன்சிரிப்புடன் நெய்தல் நிலத்தில் குடிகொண்டு அருள் வழங்கி வருகிறார். சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள அழகன் முருகன் இங்கே சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக பக்தர்களுக்கு புன்னகைத் தவழ காட்சியளிக்கிறார்.
இப்படி சிறப்பு வாய்ந்த திருக்கோயில் நிர்வாகம் தற்போது இணை ஆணையர் கார்த்திக் என்பவரிடம் சிக்கி சீரழிந்து வருகிறது.
கோயில் கட்டப்பட்ட காலம் முதலே திருச்செந்தூரில் உள்ளூர் மக்களுக்கு தரிசனத்தில் தனி சலுகை உண்டு. அதற்கான பின்னணி காரணம் தற்போதைய இணை ஆணையருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
கோயில் கட்டுமானத்தில் உள்ளூர் மக்கள் எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் முருகப்பெருமானுக்காக தெய்வ பக்தியுடன் சம்பளமின்றி ஒரு சேவையாக பணியாற்றி இருக்கிறார்கள். அது மட்டுமின்றி கோயிலில் பல்லக்கு தூக்குதல், விபூதி பொட்டலம் கட்டுதல், கோயில் காவல் பணி, தூய்மைப் பணி என பல்வேறு பணிகளையும் தாமாக முன்வந்து செய்திருக்கிறார்கள். இதற்காக அவர்களுக்கு நாள்தோறும் விபூதி பொட்டலம் ஒன்று வழங்கப்பட்டதாகவும், வீட்டிற்கு சென்று திறந்தால் அதில் பொற்காசுகள் இருந்ததாகவும் புராதனத் தகவல் உண்டு. மேலும், அவர்களின் பக்திக்கு முருகனின் அருட்பிரசாதமாக அக்காலம் முதலே தரிசனத்தில் முன்னுரிமை அளிக்கப்பட்டது. காலப்போக்கில் இது சலுகையாக மாறி, பின்னர் கட்டண தரிசனத்தில் இலவசமாக அனுமதிப்பதாக மாறியிருக்கிறது.
இப்படி பல நூறு ஆண்டுகளாக அளிக்கப்பட்ட இந்த உரிமையை தான் தற்போது தட்டிப் பறித்திருக்கிறார் இணை ஆணையர் கார்த்திக். யாதவர், நாடார், தேவர், பிள்ளை, மீனவர் என அனைத்து தரப்பு மக்களும் சாதி பாகுபாடின்றி பெற்று வந்த உரிமையை குறுநில மன்னராக செயல்படும் கார்த்திக் தடுத்திருப்பதற்கு திருச்செந்தூர் அனைத்து சமுதாய மக்களும், தமிழக மாணவர் இயக்கமும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இணை ஆணையரை கண்டித்து சாலை மறியல் போராட்டம் அறிவித்தார்கள். வருவாய் கோட்டாட்சியர் கேட்டுக் கொண்டதன் பேரில் சமாதானக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கலந்து கொண்ட கோயில் இணை ஆணையர் கார்த்திக், கோயில் பணியாளர்கள் மற்றும் சில நபர்கள், உள்ளூர் மக்கள் என பலரை தரிசனத்திற்கு கூட்டி செல்வதாக சால்ஜாப்பு கூறி தனது தவறை மறைக்க முயன்றார். இதனிடையே அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கடந்த 12-ம் தேதி, உள்ளூர் மக்கள் வாரத்தில் சனி, ஞாயிறு தவிர மற்ற நாட்களில் இலவசமாக தரிசனம் செய்து கொள்ளலாம் என இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு பிறப்பித்ததாக ஊடகங்களுக்கு செய்தி அனுப்பினார். இதனை உள்ளூர் மக்கள் வரவேற்றனர்.
ஆனால், அமைச்சரின் உத்தரவையும் “மாண்புமிகு இணை ஆணையர்” கார்த்திக் அவர்கள் சிறிதும் கண்டுகொள்ளவில்லை.
இணை ஆணையரின் அடாவடி இத்துடன் நிற்கவில்லை. அரசு பேருந்துகள் கோயில் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லும் நிலையில் இணை ஆணையர் வேண்டுமென்றே அதற்கும் தடை போட்டு பக்தர்களை அலைக்கழித்து பாடாய் படுத்துகிறார். இதற்கென தனி காவலாளிகளை போட்டு அரசுப் பேருந்துகளை நிறுத்த வேண்டிய இடத்தில் கார்களை நிறுத்த ஏற்பாடு செய்திருக்கிறார். இதனால் வெளியூர் பயணிகள் புலம்பித் தீர்க்கின்றனர்.
அரசுப் பேருந்துகளை தடுத்து கார்களுக்கு சலுகை காட்டுவதன் பின்னணி என்ன? இணை ஆணையர் விளக்கம் அளிப்பாரா?
அதுமட்டுமல்ல, கோயில் விடுதியில் அறைகளை முன்பதிவு செய்வதிலும் தில்லுமுல்லு அரங்கேறுகிறது. வெளியூர் பக்தர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டால், ஆன்லைனில் முன்பதிவு செய்யுங்கள் என்கிறார்கள். ஆன்லைனில் அத்தகைய வசதி வேலை செய்யாதது குறித்து கேட்டால் ஆப்லைனில் நேரில் முன்பதிவு செய்யுங்கள் என்பார்கள்.
உள்ளுர் மக்களின் உரிமையை பறித்த இணை ஆணையர் இந்த குளறுபடியை கண்டும் காணாமல் இருப்பதன் மர்மம் என்ன?
இணை ஆணையர் கார்த்திக்கின் அடாவடிகளை கண்டித்து ஆதார், வாக்காளர் அட்டைகளை ஒப்படைத்து நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கும் முடிவுக்கே உள்ளூர் மக்கள் வந்துவிட்டார்கள்.
இப்படி பக்தர்களையும் உள்ளூர் மக்களையும் வாட்டி வதைக்கும் ஒரு அதிகாரி அறநிலையத்துறைக்கு தேவையா? இவரால் அறநிலையத்துறைக்கும் அதன் அமைச்சர் பக்திமான் சேகர்பாபுவுக்கும் தான் அவப்பெயர்.
கோவையில் கோயில் நகைகள் சரிபார்ப்பு பிரிவில் உதவி ஆணையராக இருந்த கார்த்திக்கை விட சீனியர் அதிகாரிகள் பலர் இருக்கும் போது, இவர் திருச்செந்தூர் கோயில் இணை ஆணையராக குறுகிய காலத்தில் பதவி உயர்வு பெற்றது எப்படி?
இணை ஆணையர் கார்த்திக் குறித்து விசாரித்த போது, அவர் சில நேரங்களில் தன்னை மறந்து ஆவேசமாக நடந்துகொள்வார் என்று சக பணியாளர்களே அச்சத்துடன் கூறுகிறார்கள்.
பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் கோயிலில் இப்படிப்பட்ட நபரை இணை ஆணையராக வைத்துக் கொண்டு, HCL நிறுவனர் ஷிவ் நாடார் நன்கொடையாக அளித்த 200 கோடி ரூபாய் உட்பட மொத்தம் 300 கோடியில் புனரமைப்பு பணிகள் நடைபெறுகின்றன. எத்தனை வசதிகள் செய்தாலும் முருகனை தடையின்றி தரிசிப்பதில் தான் மக்களுக்கு உண்மையான மனத்திருப்தி ஏற்படும்.
தமிழ்க் கடவுளையும் உள்ளூர் மக்களையும் பிரித்தாளும் இணை ஆணையரின் செயலை அந்த முருகனே பொறுத்துக் கொள்ள மாட்டார்.
கார்த்திக் போன்ற அடாவடி அதிகாரிகள் அரசுப் பணிக்கே லாயக்கற்றவர்கள்.
ப்ளீஸ்… இவரை சஸ்பெண்ட் செய்யாதீர்கள்…! டிஸ்மிஸ் செய்யுங்கள்…!