மன்னர் கால படத்தை மினிமம் பட்ஜெட்டில் எடுத்து அசத்தியுள்ளது யாத்திசை படக்குழு.
கதை ஏழாம் நூற்றாண்டில் நடைபெறுகிறது. வெல்ல முடியாத சோழர்களை போரில் வீழ்த்தி மொத்த தென்திசையையும் கைப்பற்றுகிறது ரணதீரன் பாண்டியன் தலைமையிலான பாண்டியப் பேரரசு. தோல்வியால் சோழர் படை காட்டுக்குள் பதுங்கி வாழ்கிறார்கள்.
பாலை நிலத்தை சேர்ந்த எயினர்களின் மன்னரான கொதி, சோழர்களின் துணையுடன் ரணதீரனுக்கு எதிராக களமிறங்க திட்டமிடுகிறான். அதற்குள் பெரும்படையுடன் கோட்டையை நெருங்குகிறது ரணதீரனின் போர்ப்படை. யார் வென்றார்கள், அதற்கான முயற்சிகள் என்ன என்பதே படத்தின் மீதிக்கதை.
பாண்டிய மன்னராக வரும் சக்திமித்ரனின் நடிப்பு அற்புதம். நடை, உடை என அனைத்திலும் சங்க கால மன்னராக வாழ்ந்து காட்டியிருக்கிறார்.
எயினர்களின் தலைவனாக வரும் சேயோன் மிக கச்சிதமான பங்களிப்பை தந்திருக்கிறார்.
ராஜலட்சுமி, வைதேகி ஆகியோர் அழகுப் பதுமைகள். இவர்களை இன்னும் கொஞ்சம் பயன்படுத்தி இருக்கலாம். சாமியாடியாக வரும் குருசோம சுந்தரம், பெரும்பள்ளி இனக்குழுவின் தலைவியாக வரும் சுபத்ரா ஆகியோரும் கச்சிதமான நடிப்பை தந்துள்ளனர்.
வரலாற்று படத்திற்குரிய பழமையும் கம்பீரமும் இசையில் தேனருவியாக கொட்டுகிறது. சக்கரவர்த்தி இசை சக்கரவர்த்தியாக ஜொலிக்கிறார்.
அகிலேஷ் காத்தமுத்துவின் ஒளிப்பதிவு பாலை நிலத்தையும், போர்க்களத்தையும் பிரம்மிக்கத்தக்க வகையில் காட்சிப்படுத்துகிறது.
இயக்குநர் தரணி ராசேந்திரனின் தனது படைப்புத்திறனை அற்புதமாக திரையிலும் வெளிப்படுத்தி இருக்கிறார். மன்னர் கால பிரம்மாண்டங்கள் எதுவுமின்றி யதார்த்த நடையில் யாத்திரையாக பயணிக்கிறது யாத்திசை.
நம்மை சங்க காலத்திற்குள் யாத்திரை சென்று வந்த உணர்வை வழங்குவதே யாத்திசை படத்தின் வெற்றியை ஆணித்தரமாக நிரூபிக்கிறது.
– நிருபர் நாராயணன்