திரைப்பட இயக்குநர்கள் அமீர் மற்றும் வெற்றிமாறனின் வெற்றி கூட்டணியில் அமீர் கதாநாயகனாக நடிக்கும் படம் மாயவலை. அமீர் தயாரிக்கும் படத்தை வெற்றிமாறன் வெளியிடுகிறார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
சஞ்சிதா ஷெட்டி, சரண், தீனா, வின்சென்ட் அசோகன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இத்திரைப்படத்திற்கு சினேகன் பாடல்களை எழுத, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
பிரஸ் மீட் நிகழ்ச்சியில் இயக்குநர் அமீர் பேசியதாவது:
“சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும், தளபதி விஜய்க்கும் பக்கத்து மாநில ஸ்டார்கள் தேவைப்படுகின்றனர். அதுபோல் எனக்கு வெற்றிமாறனோ வெற்றிமாறனுக்கு நானோ தேவைப்படுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை. அந்தவகையில், ரஜினி, விஜய் பாணியில் தான் நானும் செல்கிறேன்.
வெற்றிமாறனை நடிக்க வைக்கும் ஆசை எனக்கு இருக்கிறது. கதாநாயகனாக, கதையின் நாயகனாக அவரை நடிக்க வைக்க இருக்கிறேன்.”
இயக்குநர் வெற்றிமாறன் பேசியதாவது:
“நடிப்பது, இயக்குவது இரண்டும் வேறு வேறு சவாரி, இரண்டையும் ஒரு சிலரால் தான் சமாளிக்க முடியும் அது என்னிடம் இல்லை அதனால் இப்போது நடிக்கும் ஆர்வம் இல்லை.
மனித உணர்வுகள் குறித்து ஒரு அருமையான விஷயத்தை இந்த படம் பேசுகிறது. படத்தில் அனைவரும் நன்றாக நடித்துள்ளனர். தீனா சிறந்த நடிகர், கேமராவிற்கு முன்னாலும் பின்னாலும் அவராகவே இருக்கிறார்.”
நடிகர் தீனா பேசியதாவது:
“நான் நடிப்பு கற்றுக்கொள்ள ஆசைப்பட்டேன். கூத்துப்பட்டறை போன்ற இடங்களில் கற்றுக்கொள்ள விரும்பினேன். ஆனால் வெற்றிமாறன் சார் படத்தில் நடித்ததே பெரிய அனுபவமாக இருந்தது. அதுபோல் தான் அமீர் அண்ணன். இருவரும் எனக்கு நிறைய கற்றுக் கொடுத்தனர்.”
நடிகை சஞ்சிதா ஷெட்டி பேசியதாவது:
“கதையில் நான் தைரியமான பெண்ணாக நடித்துள்ளேன். அமீர் சார் மிக அற்புதமாக நடித்துள்ளார். அவருடன் இணைந்து நடிக்கும் போது நிறைய கற்றுக்கொண்டேன். ”
பாடலாசிரியர் சிநேகன் பேசியதாவது:
“அமீர் இந்தப் படத்தில் அழகாய் நடித்தது மட்டுமில்லாமல் அழகாகவும் இருக்கிறார். இயக்குநர் வெற்றிமாறன் இப்படத்தில் இணைந்துள்ளது எங்களுக்கு மிகப்பெரிய பலம். மாயவலை திரைப்படம் மக்களிடையே நிச்சயம் ஒரு ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உறுதி.”
படத்தின் இயக்குநர் ரமேஷ் பாலகிருஷ்ணன் பேசுகையில், “வெற்றிமாறன் அமீரை ராஜனாக காட்டினார். இதில் இன்னொரு விதமான ராஜனை காட்டியுள்ளேன். மிகச்சிறந்த படைப்பாளியான வெற்றிமாறன் இந்த படத்தை வெளியிடுவது மகிழ்ச்சி” என்றார்.
– நிருபர் நாராயணன்