எம்எல்ஏ மற்றும் தாதாவாக உள்ள சமுத்திரக்கனிக்காக ஒரு கொலையை செய்துவிட்டு சிறுவயதில் சிறைக்கு செல்லும் விஷால் தண்டனை முடிந்து வெளியே வருகிறார். அதன் பின்பு, சமுத்திரக்கனிக்கு அடியாளாக இருக்கிறார்.
நீட் தேர்வு எழுத வரும் பிரியா பவானி சங்கரிடம் மனதை பறிகொடுக்கும் ஹீரோ, அவரை கொல்ல வரும் ரவுடிகளிடம் இருந்தும் நாயகியை காப்பாற்றுகிறார். கதாநாயகியை கொல்ல வருபவர்களின் பின்னணி என்ன? அவர்களிடம் இருந்து ஹீரோயினை விஷால் எப்படி காப்பாற்றுகிறார்? அவரது முயற்சி வெற்றி பெற்றதா? என்பது தான் படத்தின் மீதிக்கதை.
படம் முழுக்க வெட்டுக் குத்து என களேபரம் பண்ணுகிறார் விஷால். காதல் காட்சிகளில் ரொமான்ஸ் காட்டுவதிலும், குடும்பத்தை காக்க அரிவாள்மனை ஏந்துவது என நடிப்பிலும் மெருகேறியிருக்கிறார் முன்னாள் செய்தி வாசிப்பாளரான பிரியா பவானி சங்கர்.
விஜயகுமார், டெல்லி கணேஷ், ஒய்.ஜி.மகேந்திரன் என அனைவரும் கச்சிதமான நடிப்பை தந்திருக்கிறார்கள். யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், விடிவி. கணேஷ் ஆகியோரின் காமெடி காட்சிகளும் பக்காவாக செதுக்கியிருக்கிறார்கள்.
இசையில் வழக்கம் போல் மாஸ் காட்டியிருக்கிறார் நம்ம டிஎஸ்பி.
சண்டைக் காட்சிகள் மலைக்க வைப்பதாக உள்ளது. விஷாலின் உழைப்பு புரிகிறது. ஆனால், காட்சிக்கு காட்சி வன்முறை வருவதை சற்றே குறைத்திருக்கலாம்.
சாமி, சிங்கம் திரைப்படங்களின் வரிசையில் ரத்னம் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், அந்த வகையில் ஏமாற்றத்தை தந்திருக்கிறார் டைரக்டர் ஹரி.
– நிருபர் நாராயணன்