ஒடிசாவின் பாலசோரில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஹவுரா எக்ஸ்பிரஸ், சரக்கு ரயில் ஆகிய 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது.
130 கிலோ மீட்டர் வேகத்தில் வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு சிக்னல் கொடுக்கப்பட்டதில் நிகழ்ந்த குளறுபடியே விபத்திற்கு காரணம் என கூறப்படுகிறது. க்ரீன் சிக்னல் கொடுத்துவிட்டு, திடீரென ரெட் சிக்னல் கொடுக்கப்பட்ட நிலையில், புயல் வேகத்தில் பாய்ந்து சென்று கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலை, ஓட்டுநரால் உடனடியாக நிறுத்த முடியாமல் போய்விட்டது.
இதனால் எதிரே வந்த சரக்கு ரயில் மீது அசுர வேகத்தில் மோதியதில் மொத்தம் உள்ள 23 பெட்டிகளில் 21 பெட்டிகள் கவிழ்ந்தன. அதன் என்ஜின் சரக்கு ரயில் மீது ஏறி நின்றது என்றால், விபத்தின் கோரத்தை புரிந்து கொள்ளுங்கள். அதே நேரத்தில் ஹவுரா எக்ஸ்பிரஸ், கோரமண்டல் ரயில் மீது மோதியது.
ஒருசில நொடிகளில் அங்கே மக்களின் அலறல் சத்தம் எழுந்த நிலையில், ஏராளமானோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுவரை 294 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், 56 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
தவறுக்கு காரணமானவர்கள் கடுமையான தண்டனையில் இருந்து தப்ப முடியாது என சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட பிரதமர் மோடி தெரிவித்தார்.
கவாச் என்ற ரயில் மோதல் தடுப்பு கருவி அந்த பகுதியில் இல்லாததும் விபத்திற்கு காரணமாகி விட்டது. இதனிடையே உயிரிழந்தோருக்காக நாடு முழுவதும் பொதுமக்கள் ஆங்காங்கே அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நிருபர் டிவி சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.