மலைச்சாரலில் பூத்துக்குலுங்கும் குறிஞ்சிப்பூ போல பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நல்ல கதையம்சத்துடன் கூடிய படமாக வெளிவந்துள்ளது “ரயில்”.
வெண்ணிலா கபடி குழு உட்பட பல திரைப்படங்களுக்கு வசனம் எழுதிய பாஸ்கர் சக்தி இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். அவரைப் போலவே திரையிலும் புதுமுகங்களின் அணிவகுப்பு தான். கதாநாயகனாக குங்குமராஜ், கதாநாயகியாக வைரமாலா அறிமுகம்.
தேனி மாவட்டத்தின் ஒரு சிறிய கிராமத்தில் குங்குமராஜும் வைரமாலவும் வசித்து வருகிறார்கள். அவர்கள் வீட்டுருகே பஞ்சு மில்லில் பணிபுரியும் வடமாநில இளைஞர் பர்வேஸ் மெஹ்ரூ வசித்து வருகிறார். ஒருநாள் போதையில் ஹீரோ மனைவியை அடிக்க, நடுவே வந்து தடுக்கிறார் வடமாநில இளைஞர். இதனால், அவர் மீது நாயகனுக்கு ஆத்திரம் ஏற்பட, ஒருநாள் 5 லட்சம் ரூபாய் உள்ள பையை வைரமாலாவிடம் கொடுத்துவிட்டு செல்லும் பர்வேஸ் மெஹ்ரூ விபத்தில் இறந்து போகிறார்.
அவரது இறுதிச்சடங்கு எப்படி நடக்கி்றது, அவர் கொடுத்த பணம் என்னவானது, குங்குமராஜ் – வைரமாலா வாழ்க்கை என்னவானது என்பது தான் படத்தின் மீதிக்கதை.
கதாநாயகனும் கதாநாயகியும் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளனர். குங்குமராஜின் நண்பராக வரும் ரமேஷ் வைத்யா காமெடியிலும் கலகலக்கச் செய்கிறார். இப்படி கதாபாத்திரங்களை கச்சிதமாக தேர்வு செய்த இயக்குநருக்கு ஒரு சல்யூட்.
வடமாநில இளைஞர் அனாதை அல்ல… அவருக்கு நாம் இருக்கிறோம் என கூறி இறுதிச்சடங்கு செய்ய முன்வருகிறார் கதாநாயகியின் தந்தை. இதையடுத்து, அந்த ஊரே உதவ முன்வருவது நெகிழ்ச்சியான காட்சிகள்.
தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் வடக்கர்கள் வந்துவிட்டார்கள். துபாய்க்கு போவதைப் போல அவர்களுக்கு தமிழ்நாடு வாய்ப்பளிக்கிறது. ஊர் விட்டு ஊர் பிழைக்க வந்துவிட்டார்கள் என்று வடமாநிலத்தவரை ஏளனம் பேசுபவர்களுக்கு இப்படம் ஒரு சாட்டையடி. அதுவும் அந்த கடைசி அரை மணி நேரக் காட்சிகள் நமது அறிவை தட்டி எழுப்புகிறது.
தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவும் ஜனனியின் இசைச்சாரலும் ரயிலுக்கு இரு தண்டவாளம் போல பக்கபலமாக உள்ளது. சும்மா சொல்லக்கூடாது… நெஞ்சம் நெகிழ வைக்கும் படத்தை யதார்த்தத்திற்கான இலக்கணம் மீறாமல் அழகாக காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குநர்.
மொத்தத்தில் “ரயில்” ஒரு ஒற்றுமை பாடத்தை நமக்கு ஆழமாக புரியும்படி அழகாக கற்றுத் தந்திருக்கிறது.
– நிருபர் நாராயணன்