லைகா புரொடெக்சன்ஸ் தயாரிப்பில் சரவணன் இயக்கத்தில் வெளிவந்துள்ள ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம் ராங்கி. இப்படத்தில் த்ரிஷா ஒரு பத்திரிகையாளராக சூப்பராக நடித்துள்ளார் என்று தாராளமாக பாராட்டலாம்.
40 வயதிலும் இளமை மாறாத த்ரிஷா, ஆன்லைன் பத்திரிகையாளரான தையல்நாயகி கதாபாத்திரத்தில் வந்து ரசிகர்களின் இதயத்தை தைக்கிறார். அருமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். தெனாவட்டான பாடிலாங்வேஜில் படத்தில் நிஜ ராங்கியாகவே வலம் வருகிறார்.
போலி ஃபேஸ்புக் கணக்கால் உருவாகும் சர்ச்சையை த்ரிஷா தீர்த்து வைக்க, அதன் தொடர்பு சர்வதேச தீவிரவாதம் அளவுக்குச் செல்கிறது. அண்ணன் மகளின் ஃபேஸ்புக் கணக்கில் அவரைப் போலவே உரையாடும் த்ரிஷா, மறுபுறம் காதல் மொழிகளை கொட்டுவது ஒரு தீவிரவாதி என தெரியவர, அடுத்து என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை. இன்றைய தகவல் தொழில்நுட்ப காலத்தில், ஒரு விழிப்புணர்வு மெசேஜையும் ராங்கி எடுத்துரைக்கிறது.
காதல், தீவிரவாதம் என கதைக்களம் பின்னிப் பிணைந்து செல்ல, தானும் ஒரு கட்டத்தில் தீவிரவாதியின் மீது காதல் கொள்ளும் உணர்வுகளை அற்புதமாக காட்டியிருக்கிறார் த்ரிஷா.
த்ரிஷாவின் அண்ணன் மகள் கதாபாத்திரமான அனஸ்வரா ராஜனை மையமாக கொண்டே கதை பின்னப்பட்டிருந்தாலும், படம் முழுக்க ஆக்கிரமித்திருப்பவர் நம்ம த்ரிஷா தான். ஸ்டைலாகவும் க்யூட்டாகவும் நடித்துள்ளார்.
பல காட்சிகளில் வளர்ந்த நாடுகளின் சர்வேதச அரசியலையும் போட்டுத் தாக்கியிருக்கிறார்கள். வசனங்கள் கைத்தட்டல்களை பெறுகின்றன.
பாலைவன சண்டை காட்சிகளை மிரட்டலாக படம்பிடித்துக் காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் சக்திவேல். சத்யாவின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு ஓரளவு கைகொடுத்திருக்கிறது.
இப்படம் த்ரிஷாவை புதிய பரிணாமத்தில் காட்டியிருக்கிறது என்றே கூறலாம். புத்தாண்டு கொண்டாட்டத்தை தியேட்டரில் ராங்கியுடன் கொண்டாடலாம்.
– நிருபர் நாராயணன்