ஹைதராபாத் அருகே ஸ்ரீராமானுஜரின் 216 அடி உயர சமத்துவத்திற்கான சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
முச்சிந்தல் பகுதியில் உள்ள திரிதண்டி ராமானுஜ சின்ன ஜீயர் சுவாமிகளின் ஆசிரம வளாகத்தில், பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள இச்சிலையை திறந்து வைத்து பேசிய பிரதமர், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சமூக சீர்திருத்தத்தை வலியுறுத்தியவர் ராமானுஜர் என கூறினார்.
இவ்விழாவில் பிரதமர் மோடி மேலும் பேசியதாவது :
உலகம் முழுவதும் உள்ள ராமானுஜரின் சீடர்களுக்கு எனது வணக்கங்கள் . ராமானுஜர் சிலை திறப்பு விழாவில் பங்கேற்றது எனது பாக்கியம். வசந்த பஞ்சமி தினத்தில் ராமானுஜர் திறப்பு விழா நடைபெறுவது மிகவும் சிறப்பானது. இந்த சிலை இந்தியாவின் பெருமையை வருங்கால தலைமுறைக்கு கூறும் . ராமானுஜரின் இந்த உருவச்சிலை மக்களுக்கு விழிப்புணர்வை அளிக்கட்டும்.
சமூக சீர்திருத்தத்தை வலியுறுத்தியவர் ராமானுஜர். தமிழில் பல முக்கியமான படைப்புகளை ராமானுஜர் அருளி இருக்கிறார். சமஸ்கிருதம் மட்டுமின்றி தமிழ் இலக்கியங்களையும் வளர்த்துள்ளார். ராமானுஜரின் பணியில் தமிழுக்கு முக்கிய இடம் உண்டு.
உலகின் மிக பழமையான நாகரிகம் கொண்ட நாடு இந்தியா. நமது கலாச்சாரத்திற்கும் பாரம்பரியத்திற்கும் ராமானுஜரின் போதனைகள் விலை மதிக்க முடியாத பொக்கிஷமாக உள்ளது.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.