ராகவா லாரன்ஸ் பிரியா பவானி சங்கர், சரத்குமார், நாசர், பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோர் நடித்துள்ள இத்திரைப்படம் உலகெங்கும் 1,500 தியேட்டர்களில் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது.
பண விவகாரத்தில் நண்பரின் துரோகத்தால் ராகவா லாரன்ஸின் தந்தை நாசர் இறந்துபோகிறார். கடனை அடைக்க வெளிநாடு செல்லும் கதாநாயகன் பல வருடங்களுக்கு பின்னர், சென்னைக்கு மீண்டும் திரும்ப தயாராகிறார். அதற்கு ஒருசில மாதங்களுக்கு முன்பு ருத்ரனின் தாய் மரணமடைகிறார். மனைவி பிரியா பவானி சங்கர் காணாமல் போகிறார்.
தாய் எப்படி இறந்தார்? மனைவிக்கு என்ன நடந்தது? இதன் பின்னணி உண்மையை ருத்ரன் கண்டுபிடித்தாரா? என்பதே படத்தின் மீதிக் கதை.
சூப்பர் ஸ்டாரின் ரசிகரான ராகவா லாரன்ஸ் அடுத்த சூப்பர் ஸ்டாராக உருவெடுத்து வருகிறார் என்றே கூறலாம். ஆம், அதிரடி ஆக்ஷன், காதல், பாசம், சென்டிமென்ட் என அனைத்திலும் வெளுத்து வாங்குகிறார்.
முன்னாள் செய்தி வாசிப்பாளரான பிரியா பவானி சங்கர் மிக அற்புதமான நடிப்பை தந்துள்ளார். பாராட்டுக்கள்.
ஆஜானுபாகுவான வில்லன் கதாபாத்திரத்தில் சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் நடிப்பு மிரட்டல்.
நாசர், பூர்ணிமா பாக்கியராஜும் தங்கள் பங்களிப்பை மிகச் சிறப்பாக வழங்கியுள்ளனர்.
இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கும் தயாரிப்பாளர் கதிரேசன், தனது இலக்கில் ருத்ர தாண்டவம் ஆடியிருக்கிறார். பெற்றோரை அனாதை ஆக்கிவிடக் கூடாது என்ற மெசேஜும் சொல்லியிருக்கின்றனர். கன்கிராட்ஸ் சார்.
பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் ஜி.வி. பிரகாஷ் குமார் வழக்கம் போல் ஸ்கோர் செய்திருக்கிறார். ஒளிப்பதிவும், எடிட்டிங்கும் படத்திற்கு கை கொடுத்திருக்கிறது.
ருத்ரன் ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாக நகர்கிறது. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சி அசத்தல்.
மொத்தத்தில் “ருத்ரன்” திரைப்படம் ரசிகர்களுக்கு ராஜ விருந்து.
– நிருபர் நாராயணன்