காதலும் செல்போனும் இரண்டறக் கலந்துவிட்ட இன்றைய காதலின் யதார்த்த சிக்கல்களை அழகுற ரசிகர்களுக்கு புரிய வைத்திருக்கிறது லவ் டுடே. 2k கிட்ஸ்களை குறிவைத்து எடுக்கப்பட்ட படம்.
கோலிவுட்டில் புதுமை படைத்த `கோமாளி’ படத்தின் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் எழுதி, இயக்கி, நடித்திருக்கும் படம் `லவ் டுடே’
பிரதீப் – இவனா காதல், இவனாவின் அப்பாவான சத்யராஜுக்குத் தெரிய வருகிறது. அவர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால், காதலர்களுக்கு முக்கிய நிபந்தனையாக இருவரும் தங்களின் செல்போனை ஒருநாள் பரஸ்பரம் மாற்றிக்கொள்ள வேண்டும் என்று புதுமையான நிபந்தனை விதிக்கிறார் சத்யராஜ்.
இந்த சோதனையில் காதலர்கள் வென்றார்களா?, அவர்களது செல்போன்களில் இருந்த ரகசியங்களால் எழுந்த சிக்கல்கள் என்ன? என்பதை அற்புதமான காதல் கதையாகச் சொல்லியிருக்கிறது ‘லவ் டுடே’.
டைரக்டரே கதாநாயகனாக களமிறங்கியதால், நேர்த்தியாக செதுக்கப்பட்ட கதையில் அப்படியே பொருந்துகிறார் பிரதீப். சிறப்பான நடிப்பை தந்துள்ளார். பாராட்டுகள்.
இதுபோல், கதாநாயகி நிகிதாவாக வரும் அழகுப் பதுமை இவானாவும் ஹீரோவுக்கு நிகராக போட்டி போட்டு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார். பிரதீப்பின் அம்மாவாக ராதிகா சரத்குமாரும், நிகிதாவின் அப்பாவாக சத்யராஜும் கதாபாத்திரத்திற்கு ஏற்ற அற்புதமான தேர்வு.
யுவனின் கைவண்ணத்தில் பின்னணி இசையும் பாடல்களும் சுகமானவை. டீன்ஏஜ் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் காந்தமாக ஒலிக்கிறது.
காலங்கள் மாறினாலும் மாறாத காதலை புதுமையான திரைக்கதை அமைப்பில் ஒரு சிற்பி போல் செதுக்கியிருக்கிறார் இயக்குநர். அந்தவகையில் லவ் டுடே, பாஸ் டுடே தான்.