கோவையில் ஒருநாள் இரவு… கருப்பு ரெயின்கோட் அணிந்த மர்ம மனிதர், சாலையில் காண்பவர்களை எல்லாம் கொடூரமாகத் தாக்குகிறார். அவரைப் பிடிக்கச் சென்ற போலீஸ்காரர்களும் தாக்கப்படுகிறார்கள். இதையடுத்து, காவல்துறை உதவி ஆணையர் அரவிந்த், அவரை பிடிக்க நேரடியாக களமிறங்குகிறார். அவரால் அந்த திகில் நபரை பிடிக்க முடிந்ததா? அந்த மர்ம மனிதர் யார், அவரது பின்னணி என்ன? என்பது தான் படத்தின் மீதிக் கதை.
அதேநேரம், மென்பொருள் துறையில் பணியாற்றும் இளைஞர் மற்றும் அவரது மனைவி குறித்த ஒரு தனிக் கதையை இதனுடன் இரட்டை தண்டவாளம் போல இணைத்திருக்கிறார்கள்.
புது இயக்குநர் சாஜி சலீம் முதல் காட்சியிலேயே பரபரப்பாக கதையை நகர்த்த தொடங்கி விடுகிறார்.
உதவி ஆணையர் வேடத்தில் விதார்த் அற்புதமாக நடித்திருக்கிறார். ஸ்வேதா டோரத்தி, சஹானா என இரண்டு ஹீரோயின்கள். இருவருமே கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.
இரவு நேர கோவை நகரத்தையும் கார் சேஸிங்கையும் ட்ரோன் காட்சிகளில் அழகாக கேமராவுக்குள் கொண்டு வந்து, நாமும் அதனுடன் பயணிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறார் ஒளிப்பதிவாளர் ஞானசவுந்தர். பிரவீனின் பின்னணி இசை அதற்கு பக்கபலமாக இருக்கிறது.
ஒரு இரவில் நடக்கும் சஸ்பென்ஸ் திரில்லர் கதை என்பதால், சில லாஜிக் மீறல்களும் உண்டு.
முதல் பாதி ஜெட் வேகம்… இரண்டாம் பாதி டவுன் பஸ் வேகம்… ஆனாலும் இந்த இரவுக் கதை “லாந்தர்” வெளிச்சத்தில் வெற்றிகரமாக பயணித்து பாஸ் மார்க் எடுத்திருப்பதால், படத்தை தியேட்டரில் பார்க்கலாம்.
– நிருபர் நாராயணன்