ஆவடியில், தமிழ்நாடு சிறப்பு காவல் இரண்டாம் அணி வளாகத்தில் அமைந்துள்ள காவல் மருத்துவமனையில் கடந்த ஓராண்டாக லேப் டெக்னீசியன் இல்லாததால் மெடிக்கல் லேப் பூட்டிய நிலையில் உள்ளது.
ஏற்கனவே பணியிலிருந்த திருவள்ளுரை சேர்ந்த பிரான்சிஸ் என்பவர் பணிமூப்பு அடிப்படையில் ஓய்வு பெற்று சென்றுவிட்ட பிறகு வேறு யாரும் புதிதாக பணி அமர்த்தப்படவில்லை. அதனால் காவலர்கள் முதற்கொண்டு அதிகாரிகள் வரை அவசர மருத்துவ உதவிக்கு தனியார் மருத்துவ ஆய்வகங்களை நாட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
மேலும் இந்த மருத்துவமனை ஆய்வகத்தில் உள்ள பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பரிசோதனை கருவிகள் நீண்ட நாட்களாக பயன்படுத்தாமல் இருப்பதால் அவை அனைக்கும் வீணாகும் நிலை உருவாகியுள்ளது.
தற்போது இரண்டு அரசு மருத்துவர்கள் பணியில் உள்ளனர். ஆனால் போதிய பணியாளர்கள் பணி அமர்த்தப்படவில்லை.
இரவிலும் மருத்துவ சேவை கிடைப்பதால் சிறு சிறு உடல் உபாதைகளுக்குக் கூட மருத்துவ உதவியை நாடலாம். ஆனால், காலி இடத்தை நிரப்பும் பொருட்டு லேப் டெக்னீசியன் ஒருவரை உடனடியாக ஆவடி காவல் மருத்துவமனையில் நியமனம் செய்ய தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே காவலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.